கோலாலம்பூர்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி ஜனநாயகச் செயல் கட்சியிலிருந்து விலகினார். இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள அவருடன் பேச இருக்கிறார் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம்.
“ராமசாமி நல்ல நண்பர். அவர் ஜனநாயகச் செயல் கட்சியிலிருந்து ஏன் விலகினார் என்பது குறித்து தெரிந்துகொள்ள அவரிடம் பேச இருக்கிறேன். ஜனநாயகச் செயல் கட்சி எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும்,” என்று வியாழக்கிழமையன்று 36வது ஆசிய பசிபிக் வட்டமேசை மாநாட்டில் உரையாற்றிய பிறகு திரு அன்வார் தெரிவித்தார்.
திரு ராமசாமி தொடர்ந்து மலேசியர்களுக்குச் சேவையாற்ற வேண்டும் எனத் தாம் விரும்புவதாக திரு அன்வார் கூறினார்.
பிராய் சட்டமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநிலத்தின் இடைக்காலத் துணை முதல்வருமான திரு ராமசாமி ஜனநாயகச் செயல் கட்சியிலிருந்து வியாழக்கிழமையன்று விலகினார்.
ஜனநாயகச் செயல் கட்சி, பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி மீது தமக்கு எவ்வித அதிருப்தியும் இல்லை என்று அவர் கூறினார். ஆனால் தமது சேவைகளுக்கு எவ்வித அங்கீகாரமும் தராத சில தலைவர்கள் மீது அதிருப்தி கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
பதவி விலகியதை அடுத்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பிராய் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் டேவிட் மார்சலுக்கும் பாகான் டாலாம் தொகுதியில் போட்டியிடும் எம். சதீஷுக்கும் தாம் ஆதரவு தெரிவிக்கப்போவதாக டாக்டர் ராமசாமி கூறினார்.
டாக்டர் ராமசாமி 2008ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை பினாங்கு மாநிலத்தில் பத்து காவான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். 2008ஆம் ஆண்டிலிருந்து மூன்று முறை பிராய் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் இம்மாதம் 12ஆம் தேதியன்று நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

