கோலாலம்பூர்: கிளந்தான் மாநிலத்தை மலேசியக் கூட்டரசு அரசாங்கம் புறக்கணிக்கவில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
கிளந்தான் மாநிலத்தைப் பல ஆண்டுகளாக தீவிர இஸ்லாமியக் கொள்கைகளைக் கொண்ட பாஸ் கட்சி ஆட்சி செய்துவருகிறது.
கூட்டரசு அரசாங்கம் கிளந்தானைப் புறக்கணித்துவிட்டதாக கிளந்தானின் பாச்சோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது ஷியாஹிர் செ சுலைமான் அண்மையில் குற்றம் சாட்டினார்.
இம்மாதம் 9ஆம் தேதியன்று பொருளியல் அமைச்சர் ரஃபிசி ராம்லியுடனான விவாதத்தின்போது திரு முகம்மது ஷியாஹிர் இவ்வாறு கூறியது உண்மைக்குப் புறம்பானது என்றார் திரு அன்வார்.
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தின்போது கிளந்தான் மாநிலத்துக்குத்தான் ஆக அதிகமான தொகை ஒதுக்கப்பட்டதை அவர் சுட்டினார். கிளந்தானுக்கு இவ்வாண்டு 2.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் இருந்தபோது கிளந்தானுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட இது 700 மில்லியன் ரிங்கிட் அதிகம்.
கிளந்தானில் வெள்ளம் கரைபுரண்டோடியபோது கூட்டரசு அரசாங்கம் உடனடியாக உதவி செய்ததாகவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க விரைந்ததாகவும் திரு அன்வார் கூறினார்.
முகம்மது ஷியாஹிர் கூறுவது போல் கிளந்தான் மாநிலத்தைக் கூட்டரசு அரசாங்கம் மாற்றான் வீட்டுப் பிள்ளையாகக் கருதவில்லை என்றார் திரு அன்வார்.
பாஸ் கட்சியின் உதவித் தலைமைச் செயலாளரான திரு முகம்மது ஷியாஹிருக்கும் அமைச்சர் ரஃபிசிக்கும் இடையிலான விவாதம் தேசிய அளவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கிளந்தானுக்குத் தேவையானவற்றைத் தமது தலைமையிலான கூட்டரசு அரசாங்கம் வழங்கி வருவதாகப் பிரதமர் அன்வார் கூறினார். மாறாக, பாஸ் கட்சியின் கிளந்தான் மாநில அரசாங்கம் அம்மாநிலத்தை சரியாக நிர்வகிக்கவில்லை என்று திரு அன்வார் குறைகூறினார்.
“கிளந்தான் மாநில அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக்காட்ட முகம்மது ஷியாஹிர் போன்ற இளம் தலைவர்களுக்குத் தைரியம் இருக்க வேண்டும். நிலைமையை மேம்படுத்த அவர்கள் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்.
“பெர்சத்துவும் பாஸ் கட்சியும் கூட்டரசு அரசாங்கமாக இருந்தபோது கிளந்தானுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட எனது ஆட்சியில் கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது.
“அக்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தின,” என்று திரு அன்வார் தெரிவித்தார்.
பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா, திரங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இளம் வாக்காளர்களை ஈர்க்க அனைத்துக் கட்சிகளும் கடுமையாகப் போட்டியிடுகின்றன. முக்கிய போர்க்களமாக டிக்டாக் இருக்கிறது. அதன் மூலம் பிரசாரம் செய்து இளம் வாக்காளர்களை ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க ஆயிரக்கணக்கான மலேசியர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப இருக்கின்றனர். இதனால் தேர்தலுக்கு முன்பு வடக்கு கிழக்கு விரைவுச்சாலையில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1.9 மில்லியன் வாகனம் பயணம் செய்யும் என்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் இம்மாதம் 11ஆம் தேதியிலும் 12ஆம் தேதியிலும் கூடுதல் பயண நேரத்தை மலேசியர்கள் எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் செல்வோருக்கு உதவும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவுச்சாலை வரி வசூலிக்கும் நிலையங்களிலும் ஓய்வெடுக்கும் இடங்களிலும் பயணம் செய்வோருக்கு வேண்டிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

