மலேசியாவில் ஆகஸ்ட் 12ல் ஆறு மாநிலங்களில் தேர்தல்

2 mins read
ef405f92-ff03-4dec-a45f-57854bcb2e31
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் (நடு) பினாங்கு மாநிலம், கம்போங் பெர்லிசில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார். - படம்: தி ஸ்டார் 

மலேசியாவில் ஆறு மாநிலங்களில் சனிக்கிழமை தேர்தல் நடக்கிறது.

சிலாங்கூர், கிளந்தான், திரெங்கானு, நெகிரி செம்பிலான், கெடா, பினாங்கு ஆகிய அந்த ஆறு மாநிலங்களில் ஏறத்தாழ 10 மில்லியன் மலேசியர்கள் வாக்களித்து, மாநில அரசுகளைத் தேர்வு செய்கிறார்கள்.

இந்நிலையில், பினாங்கு மாநிலத்தின் பாலிக் புலாவ் என்ற நகரில் வாக்கு வேட்டையாடிய மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், இப்போதைய ஐக்கிய அரசாங்கம் தொடர்ந்து மேலும் ஐந்தாண்டுகளுக்கு மலேசியாவை ஆட்சி புரிந்தால் ஆசியாவிலேயே மாபெரும் நாடாக மலேசியா உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.

“இப்போதைய ஒற்றுமை அரசாங்கம் எட்டு மாதங்களுக்குமுன் நாட்டின் நிர்வாகத்தை மேற்கொண்டது முதல் சமூகத்தின் பல்வேறு தரப்பினர்களும் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு உதவி இருக்கிறது.

“இதன் அடிப்படையில் பார்க்கும்போது இப்போதைய அரசு தொடர்ந்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் நாடு ஆசியாவிலேயே தலைசிறந்த நிலையில் திகழும்,” என்றார் அவர்.

லங்காவியில் ‘ஜியோபார்க் டிஸ்கவரி சென்டர்’ என்ற ஒரு நிலையத்தைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர், நாடாளுமன்றத்தில் இரண்டாவது பொருளியல் வரவுசெலவுத் திட்டம் ஒன்று அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படும் என்றும் அதன் வழியாக அரசாங்க ஊழியர்களின் ஊதியம் கொஞ்சம் உயரும் என்றும் தெரிவித்தார்.

“அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வுக்காலத் திட்டங்கள் தொடர்பில் பரந்த அளவில் ஆய்வு ஒன்று இப்போது நடத்தப்பட்டு வருகிறது.

“அந்த ஆய்வு முடிந்து புதிய ஏற்பாடுகள் நடப்புக்கு வரும்வரை தற்காலிகமாக இந்தச் சம்பள உயர்வு கிடைக்கும்,” என்று பிரதமர் தெரிவித்தார்.

இதனிடையே, சனிக்கிழமை நடக்கும் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் கோலா திரெங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் வாக்களிக்க தகுதி பெற்றிருப்போரில் 85 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது சாத்தியமானால், சென்ற ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களின் அளவை (74.7%) இது விஞ்சிவிடும் என்று ஆணையத்தின் தலைவர் அப்துல் கனி சாலே கூறினார்.

இதனிடையே, தேர்தல் வாக்களிப்பு நடக்கவிருக்கின்ற ஆறு மாநிலங்களில் பினாங்கு, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் ஆகியவற்றில் காலை வேளையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் மாலையில் இடியுடன் மழை பெய்யும் என்றும் முன்னுரைக்கப்பட்டு இருக்கிறது.

கெடா மாநிலத்தின் கரையோரப் பகுதிகள் பலவற்றிலும் இதே பருவநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு நிலையம் அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்