கோலாலம்பூர்: மலேசியாவில் ஆறு மாநிலத் தேர்தல்கள் சனிக்கிழமை நடந்தன. அந்தத் தேர்தல் சுறுசுறுப்பும் பரபரப்பும் இன்றி மந்தமாக இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
மலேசியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடந்த 15வது நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளன்று இருந்த கூட்டம் அளவிற்கு இந்தத் தேர்தலில் கூட்டத்தைக் காணமுடியவில்லை என்று தகவல்கள் கூறின.
வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் பார்க்க முடியவில்லை என்று பலரும் கூறினர்.
முற்பகலில் வாக்களிப்பு மந்தமாக இருந்தது. மதியம் வரை ஆறு மாநிலங்களிலும் 40% முதல் 50% வாக்குகளே பதிவாகி இருந்தன.
இதனிடையே, நெகிரி செம்பிலானில் எஸ்கே ரோகான் என்ற வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த 83 வயது மாது தன்னுடைய வாக்கைச் செலுத்துவதற்கு முன்பாகவே வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்துவிட்டார்.
அங்கிருந்த குடும்ப உறுப்பினர்கள் அவரை மருந்தகத்திற்கு வேகமாகக் கொண்டு சென்றனர். ஆனால், கொஞ்ச நேரத்தில் அந்த மாது மரணமடைந்துவிட்டதாக தம்பின் மாவட்ட காவல்துறை தலைவர் தெரிவித்தார்.
இவ்வேளையில், கெடா மாநிலத் தேர்தலில் தங்கள் பெயர்களை மற்றவர்கள் பயன்படுத்தியதாகப் புகார் தாக்கலானதை அடுத்து மூன்று வழக்குகள் பதியப்பட்டதாக கெடா காவல்துறை ஆணையர் பிசோல் சாலே கூறினார்.
ஜார்ஜ் டவுன் பாயா தெருபோங்கில் இருந்த வாக்குச் சாவடியில் ஒரு வாக்குப் பெட்டிக்குச் சீல் இல்லாததால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு முன்னதாக 177 வாக்குச் சீட்டுகள் அந்தப் பெட்டிக்குள் போடப்பட்டு இருந்தன. பிறகு பிற்பகலில் அங்கு மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. என்றாலும் முன்னதாகவே அளிக்கப்பட்ட 177 வாக்குகள் செல்லுமா, செல்லாதா என்பது பற்றிய விவரங்கள் தெரியவரவில்லை.
இதனிடையே, ஆறு மாநிலங்களிலும் வாக்களிப்பு சுமூகமாக நடந்ததாக தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் அஸ்மி ஷாரோம் தெரிவித்தார்.
சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் சனிக்கிழமை சுல்தான் அலாம் ஷா 2 தேசியப் பள்ளியில் வாக்களிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் டாக்டர் அஸ்மி ஷாரோம், நாடு முழுவதும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. அசம்பாவிதங்கள் குறித்து நமக்கு எந்தவொரு புகாரும் கிடைக்கவில்லை என்றார்.

