தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் தேர்தல்: மில்லியன்கணக்கான மக்கள் வாக்களிப்பு

2 mins read
98ee58af-180f-4d18-9013-6b09138a91e0
பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா, திரெங்கானு, கிளந்தான் ஆகிய ஆறு மாநில சட்ட மன்றத் தேர்தலில் வாக்களிக்க 9.7 மில்லியன் மக்கள் தகுதிபெற்று இருந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மலேசியாவில் ஆறு மாநில தேர்தல்களும் கோல திரங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலும் சனிக்கிழமை சுமுகமாக நடந்து முடிந்தன.

ஆறு மாநிலங்களிலும் அமைக்கப்பட்டிருந்த 3,190 வாக்குச் சாவடிகளிலும் கோலா திரங்கானுவில் இதர 41 வாக்குச் சாவடிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மில்லியன் கணக்கான மக்கள் வாக்களித்தனர்.

சனிக்கிழமை பிற்பகல் 4 மணி நிலவரப்படி சராசரியாக ஏறக்குறைய 65 விழுக்காட்டு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

பக்கத்தான் ஹரப்பான் (பிஎச்) வசம் உள்ள சிலாங்கூரில் 65% வாக்குகள்தான் பதிவாயின.

பெரிக்கத்தான் நேஷனல் (பிஎன்) வசம் இருக்கின்ற கெடா, திரங்கானு மாநிலங்களில் வாக்களிப்பு விகிதம் 70% ஆகவும் 68% ஆகவும் இருந்தன.

வாக்களிப்பு முடிந்ததும் 186 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.

மொத்தம் 9.7 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். ஆறு மாநில சட்ட மன்றங்களில் உள்ள மொத்தம் 245 இடங்களுக்கும் 570 பேர் போட்டியிட்டனர்.

பினாங்கு (40), சிலாங்கூர் (56), நெகிரி செம்பிலான் (36), கெடா (36), திரங்கானு (32), கிளந்தான் (45) ஆகிய ஆறு மாநில சட்ட மன்றங்களுக்கு மக்கள் வாக்களித்தனர்.

அதேபோல, கோல திரங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க 122,160 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

தேர்தலை ஒட்டி முன்னதாகவே ஆகஸ்ட் 8ஆம் தேதி வாக்களித்த 72,554 பேரின் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன.

ஆயுதப்படை வீரர்கள், காவல்துறையினர், பொது நடவடிக்கைப் படையினர், அவர்களின் வாழ்க்கை துணைவியர் ஆகியோர் முன்னதாகவே வாக்களித்தவர்களில் அடங்குவர்.

இந்த வாக்குகளின் எண்ணிக்கை கோல திரங்கானுவைப் பொறுத்தவரை 1,286 ஆக இருந்தது.

ஆறு மாநிலத் தேர்தல்களிலும் பக்கத்தான் ஹரப்பான் (பிஎச்), பாரிசான் நேஷனல் (பிஎன்) இரு கட்சிகளும் சேர்ந்து கூட்டணியாகப் போட்டியிட்டன.

அவை பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியையும் இதர கட்சிகளையும் சுயேட்சை வேட்பாளர்களையும் எதிர்த்து களத்தில் இறங்கின. அதிகாரபூர்வமற்ற தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை இரவு பின்நேரத்தில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்