தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மார் மாணிக்கக் கல் சுரங்கத்தில் நிலச்சரிவு; 25 பேரைக் காணவில்லை

1 mins read
1785664d-7d99-4e38-82d0-4ab9c828a500
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி ஏரிக்குள் விழுந்த சுரங்க ஊழியர்களை மீட்புப் பணியாளர்கள் தேடுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

யங்கூன்: வடக்கு மியன்மாரில் உள்ள மாணிக்கக் கல் சுரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து குறைந்தது 25 பேரைக் காணவில்லை என மீட்புப் பணியாளர்கள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.

மியன்மாரின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வெள்ளக்காடானதைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது.

“சுமார் 25 பேரைக் காணவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்குச் செல்வதற்குச் சிரமமாக இருப்பதால் காணாமல்போனவர்கள் குறித்த விவரங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மீட்புப் பணியாளர் ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

காணாமல்போனவர்களைத் தேடி மீட்கும் பணி தொடர்வதாக சொன்ன அவர், மாணிக்கக் கற்களைத் தேடும் நம்பிக்கையுடன் சில சுரங்க ஊழியர்கள் சம்பவ இடத்துக்குத் திரும்பிவிட்டதாகக் கூறினார்.

“இதுவரை சடலம் எதையும் நாங்கள் கண்டெடுக்கவில்லை,” என்றார் அவர்.

அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவினாலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கான முயற்சி தொடர்வதாக மற்றொரு மீட்புப் பணியாளர் ஏஎஃப்பியிடம் கூறினார்.

“நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் காணாமல்போனவர்களைத் தேடுவது மீட்புப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பானதல்ல,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மீட்புப் பணியாளர் சொன்னார்.

மழைக்காலத்தின்போது மாணிக்கக் கல் சுரங்கத்தின் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். எனினும், நிலச்சரிவில் சிக்கிக்கொண்டவர்கள் சேறு, சகதியில் மாணிக்கக் கற்களைத் தேடி கண்டுபிடிக்கும் வேட்கையில் இருந்ததாக அந்த மீட்புப் பணியாளர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்