பியோங்யாங்: போருக்குத் தயாராகும் நோக்கில் ஏவுகணைத் தயாரிப்பை அதிகரிக்கும்படி வடகொரியத் தலைவர் கிம் ஜோன் உன் உத்தரவிட்டிருப்பதாக அந்நாட்டின் அரசுக்குச் சொந்தமான ஊடகம் தெரிவித்துள்ளது. நாட்டின் ராணுவ வலிமையை பெருமளவில் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு தென்கொரியாவும் அமெரிக்காவும் தயாராகி வரும் நிலையில் இந்த உத்தரவை திரு கிம் பிறப்பித்துள்ளார்.
தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் ராணுவப் பயிற்சிகளைத் தனக்கு எதிராக தொடுக்கப்பட இருக்கும் போருக்கான ஒத்திகையாக வடகொரியா பார்க்கிறது.
ஏவுகணைகள், ஏவுகணைகளைப் பாய்ச்சும் தளமேடைகள், கவச வாகனங்கள், பீரங்கிகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் ஆலைக்கு திரு கிம் கடந்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையன்று சென்றிருந்தார். அப்போது ஏவுகணை தயாரிப்பை அதிகரிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
“நமது ராணுவம் அதைப் பெருமளவில் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். போருக்காக அது எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் பகை நாடுகள் வடகொரியா மீது படையெடுக்க அஞ்சும். மீறி போர் தொடுத்தால் நிர்மூலமாகும்,” என்று திரு கிம் தெரிவித்தார்.
அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி, இதற்கு முன்பு இல்லாத அளவில் மிகப் பெருமளவிலானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அதில் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஐநா தளபத்தியத்தைச் சேர்ந்த சில நாடுகளின் ராணுவ வீரர்களும் பயிற்சியில் கலந்துகொள்வர்.
இந்தத் தகவலை தென்கொரிய ராணுவம் வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
“அவசரநிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள வலுவான கூட்டு ராணுவப் படை அவசியமாக இருக்கும். வடகொரியா விடுக்கும் மிரட்டல்களை எதிர்கொள்ள இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சிகள் மிகவும் முக்கியம்,” என்று தென்கொரிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.