ஸாஹிட் பதவி விலக வேண்டும்; அதிருப்திக் குரல்கள் எழுந்தன

ஸாஹிட் பதவி விலக வேண்டும்; அதிருப்திக் குரல்கள் எழுந்தன

2 mins read
469daf23-9b0c-4171-8ebf-ac077217c44f
சட்டமன்றத் தேர்தலில் அம்னோ படுதோல்வியைச் சந்தித்தது. இதனை அடுத்து, அதன் தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அகமது ஸாஹிட் அமிடி விலக வேண்டும் என்று அக்கட்சியைச் சேர்ந்த பலர் கூறி வருகின்றனர். - படம்: பெரித்தா ஹரியான்

கோலாலம்பூர்: அண்மையில் நடந்து முடிந்த மலேசிய மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்னோ படுதோல்வி அடைந்தது.

இதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அகமது ஸாஹிட் அமிடி விலக வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

அவ்வாறு குரல் எழுப்பியவர்களில் திரங்கானு மாநிலத்தின் முன்னாள் முதல்வர் இட்ரிஸ் ஜுசோவும் ஒருவர்.

“திரங்கானுவில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அம்னோ தோல்வியைத் தழுவியது. அகமது ஸாஹிட் அமிடி பதவி விலக வேண்டும்,” என்று அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

சட்டமன்றத் தேர்தலில் அம்னோவுக்கு ஏற்பட்ட மிக மோசமான நிலை, டாக்டர் ஸாஹிட் மீது பலர் அதிருப்தியுடன் இருப்பதைக் காட்டுவதாகவும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடனும் ஜனநாயக செயல் கட்சியுடனும் ஒத்துழைக்க அம்னோ கட்சியினர் பலருக்கு விருப்பமில்லை என்பதை நிரூபிப்பதாகவும் முன்னாள் சட்ட அமைச்சர் ஸயிட் இப்ராகிம் கூறினார்.

திரு அன்வாரின் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பானும் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணியும் கூட்டணி சேர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்து மலேசியாவை ஆட்சி செய்து வருகின்றன.

2018ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், திரங்கானு மாநிலத்தில் போட்டியிட்ட பத்து தொகுதிகளில் அம்னோ வெற்றி பெற்றது.

ஆனால் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவற்றை அம்னோவால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

திரங்கானுவில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் அம்னோ தோல்வி அடைந்தது. கிளந்தான் மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியில் அது வெற்றி பெற்றது. பினாங்கில் இரண்டு தொகுதிகளையும் சிலாங்கூரில் இரண்டு தொகுதிகளையும் நெகிரி செம்பிலானில் 14 தொகுதிகளையும் அம்னோ கைப்பற்றியது.

அம்னோவின் மிக மோசமான செயல்பாட்டுக்கு டாக்டர் ஸாஹிட் பொறுப்பேற்க வேண்டும் என்று கூட்டரசுப் பிரதேச அம்னோ இளையர் அணித் தலைவர் அலிஃப் ஃபிர்டாவோஸ் தெரிவித்தார்.

அம்னோ தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

இவ்வாண்டு கட்சித் தலைமைப் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டபோது தலைவர், துணைத் தலைவர் பதவிகளை முறையே டாக்டர் ஸாஹிட்டும் திரு முகம்மது ஹசானும் போட்டியின்றி வென்றனர்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் திரு அலிஃப் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அம்னோ சந்தித்த படுதோல்விக்கு டாக்டர் ஸாஹிட் மட்டுமே பொறுப்பு என்று சொல்வது சரியல்ல என்று அம்னோவின் வான் அகில் ஹசான் தெரிவித்தார்.

“புதிய அரசியல் சூழலில் அம்னோ எதிர்கொள்ளும் விவகாரங்களை ஆராய வேண்டும். அம்னோவாலும் ஜனநாயகச் செயல் கட்சியாலும் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்று மக்களுக்குப் புரியவைப்பதில் நாங்கள் தவறிவிட்டோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்