வெலிங்டன்: நியூசிலாந்தில் எஞ்சியிருந்த சில கொவிட்-19 கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து தளர்த்தப்படுகிறது. கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது அந்நாடு பல கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியது.
இந்தக் கடைசி சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதுடன் நியூசிலாந்தின் கொவிட்-19 நெருக்கடிநிலையை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருகின்றன.
செவ்வாய்க்கிழமையிலிருந்து சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டால் ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் நியூசிலாந்து சுகாதார அமைச்சர் அயீஷா வெரால் தெரிவித்தார்.
“நியூசிலாந்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டில் நடந்ததுபோல பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கவில்லை.
“அதே சமயத்தில் நியூசிலாந்து மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியும் மேம்பட்டுள்ளது. இதனால் எஞ்சியுள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என அமைச்சரவைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,” என்று திருவாட்டி வெரால் கூறினார்.
நியூசிலாந்தில் கடந்த ஆண்டு கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை உச்சம் தொட்டதை அடுத்து பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.


