அம்னோவின் படுதோல்விக்கு முழு பொறுப்பு ஏற்கும் ஸாஹிட்

அம்னோவின் படுதோல்விக்கு முழு பொறுப்பு ஏற்கும் ஸாஹிட்

1 mins read
3a613818-3e12-448c-8274-304a47cc60cf
அம்னோவின் நிலை மேம்படுத்தப்படும் என்று டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடி உறுதி அளித்துள்ளார். - படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அம்னோ படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் அது தோல்வியைத் தழுவியது.

இதையடுத்து, கட்சித் தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடி விலக வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அம்னோவுக்கு ஏற்பட்டுள்ள தலைக்குனிவுக்கு முழு பொறுப்பு ஏற்பதாக டாக்டர் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.

கட்சியின் நிலையை மேம்படுத்த இருப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

பதவி விலகுவது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

“நான் பதவி விலக வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன என்று எனக்குத் தெரியும். கட்சித் தலைமையின் உதவியுடன் மக்களின் நம்பிக்கையைப் பெற என்னால் முடிந்ததைச் செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.

“எங்களது அணுகுமுறை, உத்திகள் ஆகியவற்றை ஆராய்வோம். வாக்காளர்களின் ஆதரவை மீண்டும் பெற புதிய உத்திகளைக் கடைப்பிடிப்போம்,” என்று திரு ஸ்டார் நாளிதழிடம் டாக்டர் ஸாஹிட் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் அம்னோ மொத்தம் 108 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. திரங்கானுவிலும் கெடாவிலும் அது ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

பினாங்கிலும் சிலாங்கூரிலும் தலா இரண்டு இடங்களை அது கைப்பற்றியது. நெகிரி செம்பிலானில் மட்டும் அது 14 இடங்களைக் கைப்பற்றியது.

குறிப்புச் சொற்கள்