அலோர் ஸ்டார்: அண்மையில் நடந்து முடிந்த கெடா சட்டமன்றத் தேர்தலின்போது பெரிக்காத்தான் நேஷனல் சார்பாக போட்டியிட்ட சனுசி முகம்மது நூர் வாக்களித்தார். இவர் கெடா மாநிலத்தில் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குச் சீட்டில் தாம் வாக்களிக்கும் கட்சியின் சின்னத்துக்குப் பக்கத்தில் குறியிட்டு பிறகு அதைப் பெட்டிக்குள் போடுவதற்கு முன்பு திரு சனுசி அதை ஊடகத்திடம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, தேர்தல் குற்றங்கள் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று மலேசியக் காவல்துறைத் தலைவர் ரிசாருதீன் உசேன் தெரிவித்தார்.
“இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. திரு சனுசியின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். இதுதொடர்பான, சட்டக் குறிப்புகள் உன்னிப்பாக ஆராயப்படும். காவல்துறை நியாயமாக நடந்துகொள்ளும்,” என்றார் அவர்.
விசாரணை மூலம் பதிவு செய்யும் கண்டுபிடிப்புகள் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று திரு ரிசாருதீன் கூறினார்.

