இளையரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் எழுவர் கைது

1 mins read
8cb11367-fd87-4097-a386-21e608d3aa85
இளையர் தாக்கப்படுவதைக் காட்டும் ஒரு நிமிடக் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வந்தது. - படம்: சமூக ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: பதின்ம வயது இளையர் ஒருவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் பதின்ம வயதினர் எழுவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அந்த இளையர் தாக்கப்படுவதைக் காட்டும் ஒரு நிமிடக் காணொளி சமூக ஊடகங்களில் பரவலானதைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.

ஜோகூர் பாருவின் தாமான் பெஸ்தாரி இண்டா எனும் பகுதியில் இளையர்கள் எழுவர் தம்மைத் தாக்கியதாக 15 வயது இளையர் ஒருவரிடமிருந்து தங்களுக்கு தகவல் வந்ததாக ஜோகூர் பாரு செலேத்தான் காவல்துறைத் தலைவர் ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவருக்கு இரு கைகளில் சிராய்ப்புக் காயங்களும் வலது தொடையில் வீக்கமும் ஏற்பட்டது. அவருக்கு உடல் முழுவதும் வலி தென்பட்டது,” என்று திரு ரவுப் கூறினார்.

இச்சம்பவம் ஆகஸ்ட் 3ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட அந்தச் சந்தேக நபர்கள் 14 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்கள். ஜோகூர் பாருவில் ஆறு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிடிபட்டவர்கள் அணிந்திருந்த துணிமணிகளும் கைப்பேசி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக திரு ரவுப் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்