தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடகொரிய அணுவாயுதத் திட்டத்தைத் தடுப்பதில் முன்னேற்றம் காண முயற்சி

2 mins read
3e21b183-1cb8-4427-9a00-3538329581c2
வடகொரியாவை அதன் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட வைக்கும் முயற்சியில் தீவிரம். - படம்: ஏஎஃப்பி

சோல்: வடகொரியாவை ஓர் அணுவாயுத சக்தியாக உலகம் என்றும் ஏற்றுக்கொள்ளாது என்று தென்கொரிய அதிபர் யூன் சுக்-யுல் கூறியுள்ளார்.

அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஒத்துழைத்து வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்தைத் தடுக்கும் முயற்சியை தென்கொரியா மேற்கொண்டு வருகிறது. அம்முயற்சியில் முன்னேற்றம் இடம்பெறக்கூடும் என்றும் திரு யூன் நம்பிக்கை தெரிவித்தார்.

அந்நாட்டுத் தலைவர்கள் இவ்வார இறுதியில் சந்திக்கவுள்ளனர். அதில் முன்னேற்றம் காணப்படக்கூடும் என்று கருதப்படுகிறது.

வடகொரியாவின் அணுவாயுத மிரட்டல்களைக் கையாள தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்றும் தங்களின் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள எண்ணம் கொண்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோருடனான சந்திப்பு அதற்கு வழிவகுக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக திரு யூன் குறிப்பிட்டார்.

எழுத்து வடிவில் புளூம்பர்க் செய்தி நிறுவனத்துடன் நடைபெற்ற நேர்காணலில் அவர் இவ்வாறு சொன்னார்.

அமெரிக்காவின் மேரிலண்ட் மாநிலத்தில் வெள்ளிக்கிழமையன்று திரு யூன், திரு பைடனையும் திரு கிஷிடாவையும் சந்திக்கவுள்ளார். அதை முன்னிட்டு புளூம்பர்க்குடனான நேர்காணல் இடம்பெற்றது.

செவ்வாய்க்கிழமையன்று தென்கொரியத் தலைநகர் சோலில் இருக்கும் ஒரு மருத்துமனையில் தமது தந்தையின் மறைவை திரு யூன் அனுசரித்தார்.

இறுதிச் சடங்கு சிறிய அளவில் நடைபெற்றது. முன்னாள் தென்கொரிய அதிபர் லீ மியுங்-பாக் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

“வடகொரியாவை அதன் அணுவாயுதத் திட்டத்தை முழுமையாகக் கைவிடச் செய்வதே அனைத்துலக சமூகத்தின் இலக்கு என்பது மிகத் தெளிவாக இருந்து வருகிறது. தென்கொரியாவும் அமெரிக்காவும் அதில் (அனைத்துலக சமூகத்தில்) அடங்கும்,” என்று திரு யூன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்