கொடூரமாகத் தாக்கும் கொள்ளையர்களைக் கண்டவுடன் சுட்டுக்கொல்ல கோரிக்கை

கொடூரமாகத் தாக்கும் கொள்ளையர்களைக் கண்டவுடன் சுட்டுக்கொல்ல கோரிக்கை

2 mins read
cd4650c1-3a97-4d0c-b1a9-1287a1562395
கொலை, கொள்ளைச் சம்பவங்கள் குறித்து சாலையில் காவல்துறை விளக்கியது. - படம்: ஏஎஃப்பி

மேடான்: இந்தோனீசியாவில் குறுவாளுடன் கொடூரமான முறையில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்வதைத் தொடர்ந்து, காவல்துறையினர் கொள்ளையர்களைக் கண்டவுடன் சுட்டுக் கொல்லவேண்டுமென முன்னணி அரசியல்வாதிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். ஆனால், நீதிக்குப் புறம்பான கொலைகளை ஆதரிக்கக்கூடாது என மனித உரிமைக் குழுக்கள் சாடுகின்றன.

சென்ற மாதம், வட சுமத்ராவின் மேடான் நகரில், காவல்துறையினர் ஒரு “பேகாலை” சுட்டுக் கொன்றனர். கொடூரமான முறையில் வீதிகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை இந்தோனீசியாவில் “பேகால்” என்றழைப்பார்கள். இவர்களை முற்றாக “ஒழிப்பதற்காக” அவ்வாறு செய்ததாகக் காவல்துறை கூறியது. இதில் சம்பந்தப்பட்டிருந்த அதிகாரிகளை மேடான் மேயரும் இந்தோனீசிய அதிபரின் மருமகனுமான பாபி நசுட்டியோன் பாராட்டினார். இத்தகைய குற்றவாளிகளைக் கண்டவுடன் சுட்டுக் கொல்லவேண்டும் என்றும் அவர் கூறினார்.

“பேகாலுக்கும் குற்றவாளிகளுக்கும் மேடானில் இடமில்லை என்பதால் இதை நான் பாராட்டுகிறேன்,” என்று ஜூலை மாதம் அவர் கருத்துரைத்தார்.

இதுபற்றி அதிபர் விடோடோ கருத்துரைக்கவில்லை என்றாலும், வட சுமத்ரா ஆளுநர் உள்ளிட்ட மற்ற தலைவர்கள் அவரது கருத்தை ஆதரித்துள்ளனர். ஆனால், இந்தக் கொலை விசாரிக்கப்படவேண்டும் என்று இந்தோனீசிய அம்னெஸ்டி இன்டர்நே‌ஷனல் மனித உரிமைக் குழு கூறுகிறது. அதிகாரிகளும் குடிமக்களும் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள உரிமை அளிப்பதை குழு கண்டிக்கிறது.

“நீதிக்குப் புறம்பான இதுபோன்ற செய்கைகளுக்குப் பொது அதிகாரிகள் ஆதரவு தெரிவிப்பது முறையல்ல,” என்று குழுவின் இயக்குநர் உஸ்மான் ஹமீத் கூறினார்.

“பேகால்கள்” ஜகார்த்தா, மேடான், மற்ற நகர்ப்புற மையங்கள் போன்ற இடங்களில் அரிவாள், பாறை, குறுவாள் என பலவகையான ஆயுதங்களுடன் மக்களைத் தாக்கி கொள்ளையடிக்கின்றனர். கண்காணிப்புக் கேமராக்கள் அதிகமில்லாத இடங்களாகத் தேர்ந்தெடுத்து, ஸ்கூட்டரில் சென்று வேகமாகக் கொள்ளையடித்து தப்பிக்கின்றனர்.

மேடானில் மட்டும் ஜனவரியிலிருந்து இதுவரை 45 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இரு மாதங்களுக்குமுன் 22 வயது மாணவர் இன்சானுல் அன்‌ஷோரி ஹசிபுவான் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கொள்ளையர்கள் குறுவாளால் தலையில் தாக்கி பணப்பையை அபகரித்துச் சென்றனர். இச்சம்பவத்தில் மாணவர் உயிரிழந்தார். அவரது பணப்பையில் இருந்தது வெறும் 70,000 ரூப்பியா. இச்சம்பவத்தின் தொடர்பில் நால்வர் பிறகு கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்