ஆகஸ்ட் 22ல் தாய்லாந்து பிரதமர் தேர்வு

1 mins read
86e575be-7880-439d-8dc7-5cb9755d9941
மூவ் ஃபார்வர்ட் கட்சித் தலைவர் பிட்டா லிம்ஜரோயின்ராட்டின் ஆதரவாளர்களின் பேரணி. - படம்: இபிஏ

பேங்காக்: தேர்தலில் வெற்றிபெற்றும் பிரதமராகப் பதவி ஏற்க முடியாமல் போனதன் தொடர்பில் பிட்டா லிம்ஜரோயின்ராட் தொடுத்த வழக்கை தாய்லாந்து அரசமைப்புச்சட்ட நீதிமன்றம் புதன்கிழமை ஏற்க மறுத்துவிட்டது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானத்தால், பிரதமரைத் தேர்ந்தெடுக்க வெள்ளிக்கிழமைக்குள் புதிய வாக்கெடுப்பு நடைபெறக்கூடிய சாத்தியம் எழுந்துள்ளது.

மே மாதம் நடந்த தேர்தலில் பிட்டாவின் மூவ் ஃபார்வர்ட் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான முதல் வாக்கெடுப்பில் அவர் நிராகரிக்கப்பட்டார்.

இரண்டாவது வாக்கெடுப்பில் இடம்பெறவும் அவர் அனுமதிக்கப்படவில்லை. அதன் தொடர்பில்தான் பிட்டா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால், அந்த வழக்கை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

தேர்தலில் இரண்டாம் நிலையில் வெற்றிபெற்ற முன்னாள் பிரதமர் தக்சின் ‌ஷினவத்ராவின் பியூ தாய் கட்சி, பிட்டாவின் முன்னேற்றக் கட்சியைச் சேர்த்துக்கொள்ளாமல் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கவிருக்கிறது. பியூ தாய் கட்சி தொழிலதிபர் தவிசினை பிரதமர் பதவிக்கு முன்மொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்ற முடிவைத் தொடர்ந்து நாடாளுமன்ற நாயகர் வான் முகமது நூர் மாத்தா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தாய்லாந்தின் 30வது பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.