சவால்களிலிருந்து இந்தோனீசியாவைக் காக்க $293 பில்லியன் வரவுசெலவுத் திட்டம்

சவால்களிலிருந்து இந்தோனீசியாவைக் காக்க $293 பில்லியன் வரவுசெலவுத் திட்டம்

1 mins read
88f37310-d210-46ac-b913-1aaf0aff01b1
அனைத்துலகச் சவால்களிலிருந்து பொருளியல் பாதுகாக்கப்படும் என்று இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ உறுதியளித்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ, 2024ஆம் ஆண்டுக்கு 3,304.1 ட்ரில்லியன் ரூப்பியா (S$293.41 பில்லியன்) வரவுசெலவுத் திட்டத்தைப் புதன்கிழமை பரிந்துரைத்தார்.

அனைத்துலகச் சவால்களிலிருந்து பொருளியல் பாதுகாக்கப்படும் என்றும், உணவு விலைகள் நிலையாக வைத்திருக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

நாடாளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்த 2024 வரவுசெலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு, 2023ஆம் ஆண்டைவிட ஆறு விழுக்காடு கூடுதலானது.

2024ல் பொருளியல் வளர்ச்சி 5.2 விழுக்காடாக இருக்கும் என்ற கணிப்பின் அடிப்படையில் புதிய வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இவ்வாண்டு எதிர்பார்க்கப்படும் 5.3 விழுக்காடு வளர்ச்சியைவிட இது குறைவு.

திரு விடோடோ 2024ஆம் ஆண்டுக்கென நிதிக் கொள்கை எதனையும் குறிப்பிடாத போதிலும், உணவு, எரிசக்தி பாதுகாப்பு, போட்டித்திறன்மிக்கத் தற்காப்புத் துறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

உலக நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைகளே உலகின் விநியோகத் தொடர் இடையூறுகளுக்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.

உணவு விலைகளை நிலையாக வைத்திருக்கவும், பண்ணை உற்பத்தியை அதிகரிக்கவும், உணவுத் துறையை மேலும் மேம்படுத்தவும் 108.8 ட்ரில்லியன் ரூப்பியா ஒதுக்கீட்டைத் திரு விடோடோ பரிந்துரைத்தார்.

உள்கட்டமைப்புகளுக்கு 422.7 ட்ரில்லியன் ரூப்பியா ஒதுக்கப்படுகிறது. போர்னியோ தீவில் நுசந்தாரா எனும் பெயரில் புதிய தலைநகரைக் கட்டும் பணியும் இதில் உள்ளடங்கும்.

வரவுசெலவுத் திட்டத்தின் நாடாளுமன்ற விவாதம் நிறைவடைய சில மாதங்கள் எடுப்பது வழக்கம்.

ராய்ட்டர்ஸ்

குறிப்புச் சொற்கள்