கோலாலம்பூர்: மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகம்மது ஷாவை இழிவுபடுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 43 வயது ஆடவரை அந்நாட்டுக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அந்த ஆடவர் ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் மாமன்னரை இழிவுபடுத்தும் பதிவுகளைப் பதிவேற்றம் செய்ததாகக் கருதப்படுகிறது.
அவர், @SamBanjar Perak எனும் ஃபேஸ்புக் பக்கத்தின் உரிமையாளர் என்றும் நம்பப்படுகிறது. ஆடவர், பாஹாங் மாநிலத்தில் உள்ள பேரா நகரில் கைதுசெய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைப் பிரிவின் தலைவர் முகம்மது ஷுஹைலி முகம்மது ஸாய்ன் கூறினார்.
ஆடவர் நான்கு நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சமூக ஊடகங்களைப் பொறுப்பான முறையில் பயன்படுத்துமாறும் அமைதியையும் ஒற்றுமையையும் பாதிக்கும் கருத்துகளைப் பதிவேற்றம் செய்வதைத் தவிர்க்குமாறும் திரு ஷுஹைலி மக்களைக் கேட்டுக்கொண்டார்.