ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அடுத்த தலைவர், ஏற்கெனவே நடப்பிலுள்ள கொள்கைகளைத் தொடர்பவராக இருக்கவேண்டும் என்று அதிபர் ஜோகோ விடோடோ புதன்கிழமை தமது வருடாந்தர உரையில் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 2045ஆம் ஆண்டுக்குள் உயர் வருமான நிலையை அடையும் இலக்கை நிறைவேற்ற இது அவசியம் என்றார் அவர்.
“இது அதிபர் யார் என்பதைப் பற்றியதல்ல… நாங்கள் இன்று தொடங்கியிருப்பதை தொடர்வதற்கு வருங்காலத் தலைவர்கள் தயாராக இருக்கின்றனரா, அதற்குத் தேவையான துணிவும் நிலைத்தன்மையும் அவர்களுக்கு இருக்கிறதா என்பதே கேள்வி,” என்றார் திரு விடோடோ.
இந்தோனீசியா சுதந்திரம் பெற்று சரியாக நூறு ஆண்டுகள் நிறைவடையும் 2045ஆம் ஆண்டில், தனிநபரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 25,000 அமெரிக்க டாலராக்குவது இந்தோனீசியாவின் இலக்கு.
இதற்கென, நிலச்சுரங்கம் தவிர பனை எண்ணெய், தேங்காய், கடல்பாசி போன்ற பொருள்களும் விரிவுபடுத்தப்படவேண்டும் என்றார் திரு விடோடோ.
“தனது வளங்களை நிர்வகித்து, மதிப்பைக் கூட்டி, மக்களைச் செழிப்பாக்கக்கூடிய வளர்ச்சியடைந்த நாடாக இந்தோனீசியா உருமாறவேண்டும்,” என்றார் அவர்.
திரு விடோடோ 2024 அக்டோபர் மாதம் பதவியிலிருந்து ஓய்வுபெறவிருக்கிறார். இந்நிலையில், அடுத்த அதிபரிடம் எதிர்பார்ப்பவற்றைத் தமது உரையில் அவர் விவரித்தார்.
புளூம்பர்க்

