புதுடெல்லி: உலகச் சுகாதார நிறுவனம், முதன்முறையாக பாரம்பரிய மருந்து தொடர்பான மாநாட்டை நடத்துகிறது. மாநாடு வியாழக்கிழமை நடைபெறுகிறது.
எனினும், பாரம்பரிய மருந்துகளின் மூலமாக உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கக்கூடும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவேண்டும் என்றும் உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகில் மில்லியன் கணக்கானோர் பாரம்பரிய மருந்துகளைத்தான் முதலில் நாடுகின்றனர் என்பதை நிறுவனம் குறிப்பிட்டது.
பாரம்பரிய மருந்துகள் தொடர்பில் அரசியல் ரீதியாக ஆதரவைத் திரட்டவும் இது குறித்து ஆதாரத்துடன் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் பங்கேற்கும் இந்த இரண்டு நாள் மாநாடு இந்தியாவின் குஜராத் மாநிலத் தலைநகர் காந்திநகரில் நடைபெறுகிறது.
சிலருக்கு சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் பெறமுடியாமல் இருக்கலாம்; அத்தகைய சூழலில் பாரம்பரிய மருந்துகள் தீர்வாக அமையக்கூடும் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசுஸ் கூறினார். அதே வேளையில், ஆக அண்மைய அறிவியல் ஆதாரத்தைக் கருத்தில்கொண்டு சரியான, ஆக்கபூர்வமான முறையில் அவை பயன்படுத்தப்படவேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக பாரம்பரிய மருந்துகள் பாதுகாப்பாக உபயோகிக்கப்படவேண்டும் என்றும் மாநாட்டுக்கு முன்னால் வெளியிடப்பட்ட அறிக்கையில் திரு டெட்ரோஸ் சுட்டினார்.

