ஜகார்த்தா: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இந்தோனீசியா சென்ற ஆண்டு செய்த 20 பில்லியன் அமெரிக்க டாலர் (S$27 பில்லியன்) பருவநிலை நிதியளிப்பு ஒப்பந்தம் தாமதமடைந்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “ஜஸ்ட் எனர்ஜி ட்ரான்சிஷன் பார்ட்னர்ஷிப்” முதலீட்டுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளும், சட்ட, கொள்கைச் சிக்கல்களும் இதற்குக் காரணம்.
மின்சார உற்பத்திக்கு நிலக்கரியைச் சார்ந்திருக்கும் இந்தோனீசியா, தூய்மையான மின்சார உற்பத்திக்கு மாறுவதற்கு நிதி வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம்.
திட்டத்திற்கான 20 பில்லியன் டாலரில் பாதியை பணக்கார நாடுகளிலிருந்தும் மீதியை பெரிய நிதி நிலையங்களிலிருந்தும் திரட்டுவது இலக்கு.
நகல் முதலீட்டுத் திட்டம் ஏற்கனவே இந்தோனீசிய அரசாங்கத்திடமும் திட்டப் பங்காளியிடமும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், ‘கூடுதல் விவரங்கள்’ சேர்க்கப்படவேண்டும் என்பதால், விரிவான திட்டம் இவ்வாண்டு பிற்பகுதி வரை தொடங்கப்படாது என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.
இந்தோனீசியா தூய்மையான மின்சார உற்பத்திக்கு மாறுவதற்கு நெடுங்காலமாகும். 2050ஆம் ஆண்டுக்குள் அந்நிலையை அடைய 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என்று கணிக்கப்படுகிறது.
நகல் திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், கருத்துவேறுபாடுகளுக்குத் தீர்வு காண சில மாதகாலத் தாமதம் போதுமானதாக இருக்குமா என்பது தெரியவில்லை.

