கோலாலம்பூர்: பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு பெரிகத்தான் நேஷனல் கூட்டணித் தலைவர் முகைதீன் யாசின் விடுத்த அழைப்பை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வியாழக்கிழமை புறக்கணித்தார்.
இதற்குப் பதிலாகத் தன்மீதான வழக்குகளில் கவனம் செலுத்துமாறு முகைதீனுக்கு அவர் அறிவுரை கூறினார்.
“நாங்கள் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டோம். எங்களுக்கு இன்னமும் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை உள்ளது. அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்?
“அவர் தன்னுடைய நீதிமன்ற வழக்கில் கவனம் செலுத்தும்படி அறிவுரை சொல்வேன்,” எனச் செய்தியாளர்களிடம் அன்வார் கூறினார்.
பணப்புழக்கத்திற்கும் பயங்கரவாத நிதியளிப்புக்கும் எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் முகைதீன்மீது இன்னும் மூன்று குற்றச்சாட்டுகள் உள்ளன.
சென்ற வாரம் நடந்த மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் – தேசிய முன்னணி கூட்டணி போதிய ஆதரவு பெறவில்லை என்பதால் அன்வாரும் துணைப் பிரதமர் அகமது சாஹிட் ஹமிடியும் பதவி விலகவேண்டும் என்று சனிக்கிழமை முகைதீன் அழைப்பு விடுத்தார்.
மாநிலத் தேர்தலில் வாக்காளர்களைக் கவரத் தவறியதற்கு மடானி கொள்கை காரணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதில் சவால்கள் இருப்பதாகவும், சற்று காலமெடுக்கும் என்றும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவரான அன்வார் பதில் அளித்தார்.
“மலாய்க்காரர்கள் இன, சமய உணர்வுகளால் எளிதில் கவரப்படுவதாகச் சில தரப்பினர் பழி போடுவதை நான் ஒப்புக்கொள்ளவில்லை.
“இது ஒரு சவாலாக இருந்தாலும், நாங்கள் அவர்களை அணுகி (மடானி கொள்கை பற்றி) விளக்கமளிக்க முயற்சி செய்வோம்,” என்றார் திரு அன்வார்.
“மடானி ஒரு முழுமையான கொள்கை. வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்தவர்களின் பின்னணியிலிருக்கும் செல்வத்தைக் கவனிக்கவில்லை. அதற்காக அவர்கள்மீது பழி போடமாட்டேன். மடானி கொள்கை பற்றி விளக்கமளிக்க கடும் முயற்சி எடுப்பது எங்கள் நிர்வாகத்தின், தலைவர்களின் பொறுப்பு,” என்றார் அவர்.
தேர்தல் நடைபெற்ற ஆறு மாநிலங்களிலும், பத்தில் ஆறு மலாய்க்காரர்களுக்கு அன்வார் நிர்வாகம் அறிமுகப்படுத்திய மலேசியா மடானி கொள்கை புரியவில்லை என இல்ஹம் நிலையம் நடத்திய ஆய்வு கண்டறிந்தது.
அரசாங்கத்தின் நோக்கத்தை 39 விழுக்காடு மலாய்க்காரர்கள் மட்டுமே புரிந்து கொண்டிருந்தனர். ஆனால், சீனர்களில் 61 விழுக்காட்டினரும் இந்தியர்களில் 55 விழுக்காட்டினரும் மற்ற பிரிவினரில் 75 விழுக்காட்டினரும் மடானி கொள்கையைப் புரிந்து கொண்டிருந்ததாக ஆய்வு தெரிவித்தது.