சோல்: தென்கொரியா, 300,000 அனைத்துலக மாணவர்களை ஈர்ப்பதற்கான ஐந்தாண்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. புதன்கிழமை அந்நாட்டின் கல்வி அமைச்சு அத்திட்டத்தை வெளியிட்டது.
தென்கொரியாவில் பள்ளி செல்லும் வயதில் இருப்போரின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. அப்பிரச்சினையைக் கையாள இத்திட்டம் வரையப்பட்டுள்ளது.
உள்ளூர் பல்கலைக்கழகங்களின் போட்டித்தன்மையை வலுப்படுத்துவது திட்டத்தின் இலக்கு. தென்கொரியப் பல்கலைக்கழகங்களில் ஏற்கெனவே போதுமான மாணவர்கள் சேர்வதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் முதல் ஆண்டு பட்டக் கல்வி பயில விரும்பும் அனைத்துலக மாணவர்களில் 30 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு கொரிய மொழி ஓரளவு தெரிந்திருக்கவேண்டும் என்ற நிபந்தனை தற்போது இருக்கிறது. ‘டோப்பிக்’ எனும் கொரிய மொழித் தேர்ச்சி முறையின்கீழ் மாணவர்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையை அடைந்திருக்கவேண்டும்.
அந்த நிபந்தனையை விலக்குவது குறித்து தென்கொரியக் கல்வி அமைச்சு ஆலோசித்து வருகிறது. அதோடு, கொரிய மொழி, கலாசாரம் ஆகியவை தொடர்பான கல்வியை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், ‘டோப்பிக்’ தேர்வுகளை இணையத்தில் எழுதுவதற்கான வசதி செய்து தரப்படும்.
கொரிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கான தேவை அதிகரித்து வருகிறது. தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சு, கலாசார அமைச்சுடன் இணைந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

