ஷா ஆலாம், பண்டார் எல்மினாவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தனியார் விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பத்துப் பேர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் எட்டுப் பேர் விமானத்தில் பயணம் செய்தவர்கள். இருவர், அப் பகுதியில் நடந்து சென்ற பாதசாரிகள் என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான தனியார் ஜெட் விமானத்தில் எட்டுப் பயணிகளும் இரண்டு விமானச் சிப்பந்திகளும் இருந்ததாக மலேசிய சிவில் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
விமானத்தில் பயணம் செய்ததாக நம்பப்படும் மற்றவர்களின் நிலைமை குறித்து எதுவும் தெரியவில்லை என்று ஆணையம் கூறியது.
பாகாங் மாநில பிளாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான 54 வயது ஜொஹாரி ஹாருன் விபத்தில் மரணமடைந்தவர்களில் ஒருவர் என்று பாகாங் மாநில சட்டமன்ற சபாநாயகர் முகமது ஷர்கார் சம்சுதின் வியாழக்கிழமை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.
அம்னோ கட்சி உறுப்பினர்களும் உள்ளூர் அரசியல்வாதிகளும் சமூக ஊடகங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
வியாழக்கிழமை பிற்பகல் 2.47 மணியளவில் சுபாங் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் அவ்விமானம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. அடுத்த சில நிமிடங்களில், அதாவது 2.51 மணிக்கு விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து புகை வருவதைக் காண முடிந்தது என்று கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.
கோலாலம்பூர் விமானத் துறை மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம் உடனடியாக தேடல், மீட்பு பணிகளை முடுக்கிவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
லங்காவி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.08 மணிக்கு புறப்பட்ட அந்தத் தனியார் விமானம், சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்தை நோக்கிச் சென்றது. விமான நிலையத்தை நெருங்கும் வேளையில் தனியார் விமானம் விபத்தில் சிக்கியது.
விபத்தை நேரில் பார்த்த சிலர், தரையில் விமானம் மோதிய வேகத்தில் வெடித்தது என்று கூறியுள்ளனர். விமானத்திலிருந்து பறந்த சிதைவுகள் அருகில் இருந்த மோட்டார் சைக்கிள்களைச் சேதப்படுத்தின.
‘பீச்கிராஃப்ட்-390’ ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் ஜெட்வாலெட் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது என நம்பப்படுகிறது.