தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய விமான விபத்து: மாண்டோரின் உடல்கள் மீட்பு

2 mins read
9dcea82f-b4d0-4e45-a9be-7df9f105ffa8
விழுந்து நொறுங்கிய விமானத்தின் சிதைவுகள். - படம்: ஏஎஃப்பி

ஷா ஆலம்: மலேசியாவில் வாகனங்கள் செல்லும் சாலையில் விழுந்த விமான விபத்தில் மாண்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத்திலிருந்து விமானிகள் பயன்படுத்தும் குரல் பதிவுக் கருவியும் (காக்பிட் ரெக்கார்டர்) கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் வியாழக்கிழமையன்று சிலாங்கூர் மாநிலத்தில் நிகழ்ந்தது. குறைவான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச்செல்லும் தனியார் விமானம் ஒன்று சாலையில் விழுந்து நொறுங்கியது. அப்போது அது இரண்டு வாகனங்களின்மீதும் மோதியது.

ஷா ஆலம் பகுதியில் உள்ள எல்மினா நகருக்கு அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 10 பேர் மாண்டனர். அவர்களில் எட்டு பேர் விமானத்திலிருந்த பயணிகள். ஒரு காரின் ஓட்டுநரும் ஒரு மோட்டார்சைக்கிளோட்டியும் உயிரிழந்த மற்ற இருவர்.

விமானத்தின் குரல் பதிவுக் கருவியை ஆகாய விபத்து விசாரணைப் பிரிவு பெற்றதாகவும் அக்கருவி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான் கூறினார்.

“10 உடல்களையும் ஐந்து உடல் உறுப்புகளையும் நாங்கள் கண்டெடுத்துள்ளோம்.

“அதனால் பலியானோரைத் தேடும் நடவடிக்கை முடிந்துவிட்டது.

“பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள உடல்களும் உடல் உறுப்புகளும் கிள்ளானில் இருக்கும் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பப்படும்,” என்று திரு ஹுசைன் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாண்டோரில் ஒருவரின் உடல் மட்டும்தான் முழுமையாக மீட்கப்பட்டிருக்கிறது. அந்த உடல், விபத்தில் பலியான மோட்டார்சைக்கிளோட்டியுடையது என்று தலைமை காவல்துறை ஆய்வாளர் ராஸாருதீன் ஹுசைன் சொன்னார்.

சம்பவத்தில் மாண்ட கார் ஓட்டுநர் ஒரு தனியார் வாடகை வாகன ஓட்டுநர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அவரின் நெருங்கியவர்களை இன்னும் தொடர்புகொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்