வாஷிங்டன்: ஜப்பானிடமிருந்து தென்கொரியா 1945ல் சுதந்திரம் பெற்றதை இந்த வாரம் அனுசரித்த தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், தமது அண்டைநாட்டு ஆக்கிரமிப்பின்கீழ் தமது நாட்டு மக்கள் அனுபவித்த 35 ஆண்டுகால கொடுமை குறித்து அதிகம் பேசவில்லை.
மாறாக, ஜப்பானிய ஆட்சியின்கீழ் பட்ட அவமானங்களை நினைவுகூர்வதற்கு வயது போதாத திரு யூன், 62, ஒரே பண்புநலன்கள், விருப்பங்களைப் பகிரும் தமது பங்காளியாக ஜப்பானைக் கொண்டாடினார்.
வடகொரியாவிடமிருந்து எதிர்நோக்கப்படும் அணுவாயுத மிரட்டல்கள் சோலுக்கும் தோக்கியோவுக்கும் தொடர் கவலையாக இருந்து வரும் நிலையில், கம்யூனிஸ்ட் மூர்க்கத்தனத்துக்கு தமது கண்டனத்தை திரு யூன் விட்டுவைத்துள்ளார்.
அமெரிக்காவின் அணுக்க நட்பு நாடுகளான தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே உறவு வலுப்படும் என பைடன் நிர்வாகம் நம்புகிறது. இந்த மாற்றம், வட்டாரத்தில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள வாஷிங்டன் முன்னெடுக்கும் முயற்சியை வேகப்படுத்துவதுடன், தைவானைத் தற்காக்க உதவும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முத்தரப்புச் சந்திப்பான டேவிட் முகாமில் இடம்பெறும் உச்சநிலை மாநாட்டில் தென்கொரியா, ஜப்பான் உடனான உறவுகளை வலுப்படுத்த விருப்பம் கொண்டுள்ளார். அந்த அதிபர் ஓய்வுத்தளச் சந்திப்பு, மேரிலாண்டின் கேடோக்டின் மலையில் வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்தது.
ஒரு நாட்டின் தற்காப்பு மீது மற்றொரு நாடு கொள்ளும் கடப்பாட்டை முறைப்படி உறுதிப்படுத்தும் பாதுகாப்பு உடன்பாட்டை அந்த உச்சநிலை மாநாடு அனேகமாக ஏற்படுத்தாது என்றபோதிலும், வட்டாரப் பொறுப்புகள் பற்றிய பரஸ்பர புரிந்துணர்வுக்கு தலைவர்கள் இணக்கம் தெரிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா, வடகொரியாவின் மூர்க்கத்தனமான செயல்கள் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு கவலையைத் தருவதை அந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த அரசதந்திரிகள் கருதுகின்றனர்.