மனாமா: ஏற்கெனவே கடுமையான வெப்பத்துடன் போராடிவரும் பஹ்ரேன், இப்போது இன்னொரு சுற்றுப்புற அபாயத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
கடல்மட்டம் உயர்ந்து வருவதால், தீவின் சில கடலோரப் பகுதிகள் ஆபத்தில் இருப்பதாக எண்ணெய், சுற்றுப்புற அமைச்சர் டாக்டர் முகமது பின் முபாரக் பின் டாய்னா கூறியிருக்கிறார்.
“பஹ்ரேன் பலவீனமான நிலையில் இருக்கிறது,” என்று ஒரு பேட்டியில் அவர் கூறினார்.
“சலசலப்பில்லாத மிரட்டலே பெரும் மிரட்டல், அதுதான் கடல்மட்ட உயர்வு,” என்றார் அவர்.
இதனால், குறிப்பிட்ட சில கடலோரப் பகுதிகளில் கடற்கரையை அகலப்படுத்தி, உயரமான கடற்சுவர் எழுப்பி, நிலமட்டத்தை உயர்த்தும் பணிகளை பஹ்ரேன் தொடங்கவிருக்கிறது.
அதிகாரபூர்வக் கணிப்புகளின்படி, கடல்மட்டம் ஐந்து மீட்டர் உயர்ந்தால், அனைத்துலக விமான நிலையம் உட்பட, நாட்டின் பெரும்பகுதி கடலுக்கடியில் போய்விடும்.
கடல்மட்டம் அரை மீட்டருக்கும் இரண்டு மீட்டருக்கும் இடையில் உயர்ந்தால், பஹ்ரேனின் மொத்த நிலப்பரப்பில் ஐந்து முதல் 18 விழுக்காடு கடலில் மூழ்கிவிடும் என்று அரேபியா வளைகுடா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் டாக்டர் சபா அல்ஜினேட் கூறினார்.
எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளில் பஹ்ரேன் மட்டும்தான் தீவு நாடு. அதன் மக்களும் முக்கிய வசதிகளும் கடல்மட்டத்திலிருந்து ஐந்து மீட்டருக்கும் குறைவான உயரமே உள்ள தாழ்வான கடலோரப் பகுதிகளில் உள்ளன.
உலகின் சூடேற்றத்தால் மற்ற பல தீவுகளும் கடல்மட்டம் உயரும் அபாயத்தை எதிர்நோக்குகின்றன. ஆனால், பருவநிலை நெருக்கடிக்குக் காரணமான எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடு பஹ்ரேன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடல்மட்ட உயர்வால் பஹ்ரேனின் அரிய நிலத்தடி நீரில் உப்புநீர் கலக்கக்கூடிய அபாயமும் உள்ளது.
“இதனால்தான் கடல்மட்ட உயர்வுக்கு பஹ்ரேன் பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது,” என்றார் டாக்டர் முகமது.
கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கும் திட்டம் பத்தாண்டுகளுக்குள் நிறைவடையும் என்றும், அரசாங்கம் அதற்கு நிதியளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

