ராணுவ உறவை, ஒத்துழைப்பைபலப்படுத்த முத்தரப்பு இணக்கம்

2 mins read
அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா சீனாவைக் கண்டித்தன
0b34961b-c5ed-4608-8418-7301e0e0dfe8
அமெரிக்க அதிபர் பைடன் (நடு) தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், ஜப்பானின் பிரதமர் ஃபூமியோ கிஷிடா ஆகியோர் கேம்ப் டேவிட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். - படம்: ஏஎஃப்பி

கேம்ப் டேவிட்: தென் சீனக் கடலில் சீனா ஆபத்தான முறையில் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறது என்று அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் தலைவர்கள் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார்கள்.

ராணுவ, பொருளியல் ஒத்துழைப்பை வலுவாக்கவும் அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய நேச நாடுகளாக இருக்கின்ற தென்கொரியாவின் அதிபர் யூன் சுக் யோல், ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா ஆகியோருடன் அமெரிக்க அதிபர் பைடன் கேம்ப் டேவிட்டில் பேச்சு நடத்தினார்.

சீனாவின் பலம் அதிகமாகி வருகிறது. வடகொரியா அணுவாயுத ஏவுகணைச் சோதனை மூலம் பயமுறுத்தி வருகிறது.

இந்தச் சூழலில் தாங்கள் ஐக்கியமாக இருப்பதைக் காட்டிக்கொள்ளும் வகையில் அந்த மூன்று நாடுகளின் தலைவர்களும் சந்தித்தனர். அந்த உச்சநிலை சந்திப்பை அடுத்து கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

“நெருக்கடி காலத்தின்போது ஒருவர் மற்றொருவருடன் முறையாகக் கலந்து பேசுவோம்; எங்கள் நலன்களைப் பாதிக்கக்கூடிய வட்டார சவால்கள், கோபமூட்டும் செயல்கள், மிரட்டல்களைச் சேர்ந்து சமாளிப்போம்,” என்று மூன்று நாடுகளின் தலைவர்களும் அறிக்கையில் தெரிவித்தனர்.

ஆண்டுதோறும் ராணுவப் பயிற்சிகளை நடத்தவும் வடகொரியாவின் அணுஆயுத மிரட்டல்கள் பற்றி உடனுக்குடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளப் போவதாகவும் அவர்கள் உறுதி கூறினர். ஆண்டுதோறும் முத்தரப்பு ராணுவ உச்சநிலைக் கூட்டத்தை நடத்தப்போவதாகவும் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் மேரிலேண்ட்டில் உள்ள அதிபரின் பிரத்யேக இடமான கேம்ப் டேவிட்டில் நடந்த அந்தக் கூட்டம் அமெரிக்கா , ஜப்பான், தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது தனிக் கூட்டமாகும்.

அந்த உச்சநிலைக் கூட்டத்தில் சீனாவை மூன்று நாடுகளின் தலைவர்களும் குறை கூறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த அளவுக்குக் கடுமையாகக் கண்டிப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இதைக் கேட்டு சீனா பொங்கி எழும் வாய்ப்பு இருக்கிறது. தென்கொரியா, ஜப்பான் நாடுகளைப் பொறுத்தவரை அவற்றின் உயிர்நாடியான வர்த்தகப் பங்காளி நாடாக இருப்பது சீனாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

“தென்சீனக் கடலில் அண்மைய காலத்தில் சீனா நடந்துகொள்ளும் முறை சரியில்லை. அது கடல் பகுதிகளைச் சட்டவிரோதமான முறையில் சொந்தம் கொண்டாடுகிறது. அதற்கு ஆதரவாக அது மற்ற நாடுகளுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகிறது. மூர்க்கமாக நடந்துகொள்கிறது.

“இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சட்டபூர்வமான ஏற்பாடுகளை, நிலவரங்களை மாற்றும் வகையில் இப்படி ஒருதரப்பாக சீனா நடந்துகொள்வதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்,” என்று அறிக்கையில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்