மலாக்கா: மலேசியாவில் சிறிய விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து தடம்புரண்டது. விமானத்தின் 23 வயது பெண் பயிற்சி விமானி அவரசமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் பத்து பெரெண்டாமில் உள்ள மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்தது.
பிற்பகல் 12.16 மணியளவில் முன்பகுதி கீழ்நோக்கி இருந்தவாறு விமானம் தடம்புரண்டதாக மலாக்கா தெங்கா இணைக் காவல்துறை ஆணையர் கிறிஸ்டஃபர் பட்டிட் கூறினார். தடம்புரண்ட விமானத்தை இன்டர்நேஷனல் ஏரோ ட்ரெய்னிங் அக்காடமி எனும் விமானப் பயிற்சிக் கழகம் நிர்வகித்து வருகிறது.
விமானத்தை அவசரமாகத் தரையிறக்க நேரிட்டதைத் தொடர்ந்து அதில் இருந்த பயிற்சி விமானிக்கு இதய வலி ஏற்பட்டதென திரு பட்டிட் சொன்னார். பெயர் தெரிவிக்கப்படாத அந்தப் பயிற்சி விமானி அவசரமாக மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவத்தில் யாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.50 மணிக்குள் சேதமடைந்த விமானம் அகற்றப்பட்டதாகவும் ஓடுபாதை சீரான நிலைக்குத் திரும்பியதாகவும் திரு பட்டிட் குறிப்பிட்டார்.

