மெக்சிகோ, கலிஃபோர்னியாவை மிரட்டும் ஹிலாரி புயல்; பேரிடர் வெள்ளம் எச்சரிக்கை

மெக்சிகோ, கலிஃபோர்னியாவை மிரட்டும் ஹிலாரி புயல்; பேரிடர் வெள்ளம் எச்சரிக்கை

2 mins read
a3ab99c6-921b-4113-928b-670feb69f044
பலத்த புயல் மெக்சிகோவின் பிரபலமான காபோ சான் லூகாஸ் நகரை வெள்ளிக்கிழமை நெருங்கிவிடும் என்று எதிர்பார்ப்பதாக தேசிய புயல் மையம் அறிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

மெக்சிகோ சிட்டி: ஹிலாரி என்ற நான்காம் வகை புயல் மெக்சிகோவையும் கலிபோர்னியாவையும் நோக்கி வெள்ளிக்கிழமை நகர்ந்ததாக அமெரிக்காவின் தேசிய புயல் மையம் எச்சரித்தது.

இந்த வகைப் புயல் மணிக்கு 215 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும்.

கலிஃபோர்னியாவுக்கான முதலாவது எச்சரிக்கையாக அது கருதப்படுகிறது. உயிர்பலி ஆபத்து இருப்பதாகவும் படுபயங்கர வெள்ளம் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் அந்த மையம் எச்சரித்துள்ளது.

மிகவும் சக்தி வாய்ந்த அந்தப் புயல் வெள்ளிக்கிழமை பின்நேரத்தில் மெக்சிகோவின் பிரபலமான காபோ சான் லூகாஸ் நகரை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த மையம் குறிப்பிட்டது.

அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையை அடையும்போது அந்தப் புயல் வலுவிழந்து விடக்கூடிய நிலை உள்ளது என்றாலும் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மழை, வெள்ளப் பேரிடர் ஏற்படக்கூடும் என்று அது எச்சரித்துள்ளது.

பாஜா கலிஃபோர்னியா என்ற மெக்சிகோவின் தீபகற்பத்திலும் அமெரிக்காவின் தென் கலிஃபோர்னியாவிலும் இந்த வார முடிவிலும் அடுத்த வார தொடக்கத்திலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு வெள்ளம் ஏற்படக்கூடும் என்று மயாமியில் செயல்படும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

மெக்சிகோவின் பாஜா கலிஃபோர்னியா தீபகற்பத்தில் இரண்டு மாநிலங்கள் அமைந்து உள்ளன. அவற்றில் வட கோடியில் அமைந்து உள்ள மாநிலம் அத்தியாவசியமற்ற பொதுச் சேவைகளை எல்லாம் நிறுத்திவிட்டது. திங்கட்கிழமை வரை பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ளன.

மெக்சிகோவின் இரண்டாவது ஆகப்பெரிய நகரான திஜுவானாவில் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்காலிக முகாம்களுக்குச் சென்றுவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

அந்தத் தீபகற்பத்தின் தென்மாநிலத்தில் நடக்கவிருந்த விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்க வேண்டும். தண்ணீர், அத்தியாவசியப் பொருள்களை வீட்டில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அந்த மாநில ஆளுநர் மக்களுக்கு ஏற்கெனவே கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

இதனிடையே, ஹிலாரி புயல் காரணமாக அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சான் டிகோ நகர் முதல் லாஸ் ஏஞ்சலஸ் வரை வெள்ளம் ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று அந்த மையத்தின் துணை இயக்குநர் ரோமி எச்சரித்தார்.

ஹிலாரி புயல் மேற்கு-வடமேற்கு திசையில் ஏறக்குறைய மணிக்கு 19 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது கரையேறும்போது கூடினபட்சமாக சுமார் 215 கி.மீ. காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

கலிஃபோர்னியா மாநிலத்திலும் தென் நேவேடா மாநிலத்திலும் கடும் மழை பெய்யும் என்றும் மோசமான வெள்ளம் ஏற்படக்கூடிய ஆபத்து உண்டு என்றும் திரு ரோமி எச்சரித்தார்.

கலிஃபோர்னியாவின் தென்புறப் பகுதிகளுக்கு இந்த அளவுக்கு எச்சரிக்கை இப்போதுதான் முதன்முதலாக விடுக்கப்பட்டு இருக்கிறது என்பது தேசிய பருவநிலைச் சேவை நிறுவனத்தின் ஆவணங்களில் இருந்து தெரியவருகிறது.

குறிப்புச் சொற்கள்