தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அணுசக்தி ஆலை நீர் திறப்பு: சமாதான முயற்சியில் ஜப்பானியப் பிரதமர்

1 mins read
b807d729-db8e-4a11-96e5-58865decd9c8
ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலையை ஞாயிறன்று ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பார்வையிட்டார். - படம்: இபிஏ

தோக்கியோ: அணு ஆலையில் பயன்படுத்தப்பட்ட நீரை கடலுக்கு அனுப்புவது குறித்த மீன்பிடி வர்த்தகப் பிரதிநிதிகளின் கவலையைப் போக்கும் விதமாக ஜப்பானியப் பிரதமர் ஃபூமியோ கிஷிடா அவர்களை திங்கட்கிழமை சந்திக்கத் திட்டமிட்டு இருந்தார்.

ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலையில் இருந்து திறந்துவிடப்படும் அந்தத் தண்ணீர் பாதுகாப்பானது என்பதை அப்போது திரு கிஷிடா மீன்பிடி வர்த்தகர்களிடம் தெரிவிப்பார் என்றும் இந்த விவகாரத்தில் அவர்களிடம் சமரசம் ஏற்படுத்த அவர் முனைவார் என்றும் ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

அதன் பின்னரே அந்த நீரை எப்போது கடலுக்கு அனுப்புவது என்பது குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும். கிட்டத்தட்ட 500 ஒலிம்பிக் திடலுக்குச் சமமான நீச்சல்குளத்தை நிரப்பும் அளவுள்ள நீரை கடலில் கலக்க உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்புக்குரல்கள் கிளம்பி உள்ளன. கதிரியக்க ஆபத்து அந்த நீரில் இருக்கலாம் என்றும் அதனால் கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் வடஜப்பான் கடலோரம் உள்ள அந்த அணுசக்தி ஆலைக்குள் ராட்சத கடலலைகள் புகுந்து அணுஉலைகளைச் சேதப்படுத்தின. அவ்வாறு சேதமுற்ற அணுஉலைகளைக் குளிர்விக்க அதிக அளவு நீர் பயன்படுத்தப்பட்டது. அந்த நீரை வெளியேற்ற ஜப்பான் திட்டம் வகுத்துள்ளது.

முன்னதாக, பாதிக்கப்பட்ட அணுசக்தி ஆலையை திரு கிஷிடா ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

குறிப்புச் சொற்கள்