கோலாலம்பூர்: 76 வயது ஆனாலும் பிரதமர் பதவிக்காலம் முழுவதும் தம்மால் ஆரோக்கியமாகச் செயல்பட முடியும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமது 75வது வயதில் பிரதமர் பதவி ஏற்ற அவர், இம்மாதம் 76வது வயதைத் தொட்டார். அதனையொட்டி, அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனமான சிஎன்பிசி அவரை பேட்டி கண்டது.
முன்னரே பதிவுசெய்யப்பட்ட அந்த பேட்டியின் ஒலிப்பதிவை அந்நிறுவனம் திங்கட்கிழமை வெளியிட்டது.
76 வயதானாலும் இன்னும் தாம் நல்ல உடல்நிலையில் இருப்பதாக திரு அன்வார் அதில் தெரிவித்துள்ளார்.
“நான் பிரதமர் பதவி ஏற்று சில மாதங்கள் கடந்துள்ளதை மக்கள் அறிவர். பிரதமர் பதவியில் இருப்பவர்கள் இதயப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதால் நானும் பரிசோதனைக்குச் சென்றேன். ஒருகுறையும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.
“நான் இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எஞ்சி இருக்கும் நான்கு ஆண்டு பதவிக் காலம் முழுவதும் நான் ஆரோக்கியத்துடன் இருப்பேன்,” என்று திரு அன்வார் கூறியுள்ளார்.