தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசியல் நிலைத்தன்மையை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன: அன்வார்

2 mins read
c075d66c-fb72-46cc-992f-b8c9498dc5dd
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: இபிஏ

கோலாலம்பூர்: அண்மையில் நடந்து முடிந்த ஆறு மாநிலத் தேர்தல் முடிவுகள் ஒற்றுமை அரசாங்கத்தின் செயல்பாடுகள் நல்ல நிலையில் உள்ளதையும் அரசியல் நிலைத்தன்மையையும் உணர்த்தி இருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார்.

ஆட்சி நிர்வாகத்தை அரசாங்கம் நல்லமுறையில் கட்டிக்காத்ததற்கான அங்கீகாரம் இது என்று அவர் சிஎன்பிசி ஒலிபரப்பு நிறுவனத்திடம் கூறினார். அவரது சிறப்புப் பேட்டியை சிஎன்பிசி திங்கட்கிழமை வெளியிட்டது.

“மலேசியப் பொருளியலின் முதுகெலும்பாகத் திகழக்கூடிய மூன்று மாநிலங்களை பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியும் அதனுடன் இணைந்த கட்சிகளும் வெற்றிகரமாகத் தக்கவைத்துக்கொண்டுள்ளன.

“மக்கள்தொகை நிறைந்த பொருளியலில் சிறந்த மாநிலங்கள் அவை.

“முக்கியமாக, நாடாளுமன்றத்தில் ஒற்றுமை அரசாங்கத்துக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை இப்போதும் உள்ளது.

“மாநிலத் தேர்தல் முடிவுகளால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. அரசியல் நிலைத்தன்மையையே இது உணர்த்துகிறது,” என்றார் திரு அன்வார்.

மாநிலத் தேர்தல்கள் நடைபெறும்போதும் இடைத் தேர்தல்களின்போதும் இன, சமயப் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும்போது அரசாங்கத்துக்கு தர்மசங்கடம் ஏற்படும்.

பொருளியலைச் சீரமைக்கப் போராடும் வேளையில் ஆளும் கட்சியை எதிர்க்கட்சியினர் குறைகூறுவதும் வழக்கமாக உள்ளது.

இருப்பினும், இத்தனை எதிர்ப்பு அலைகளையும் கடந்து நாங்கள் வியக்கத்தக்க அளவுக்குச் செயலாற்றி இருக்கிறோம்.

“நாங்கள் இப்போது நிம்மதியாக உள்ளோம். எஞ்சி இருக்கும் நான்கு ஆண்டு காலமும் சீரமைப்புத் திட்டங்களிலும் லஞ்ச ஊழலை வேரோடு அறுப்பதிலும் கவனம் செலுத்துவதோடு இடைவிடாது தொடரும் இன, சமயம் தொடர்பான பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டி உள்ளது,” என்று திரு அன்வார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்