வாஷிங்டன்: அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ரைமொண்டோ ஆகஸ்ட் மாதம் பெய்ஜிங்கிற்கு திட்டமிடப்பட்ட பயணத்திற்கு முன்னதாக 27 சீன நிறுவனங்கள், அமைப்புகள் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
வாஷிங்டனின் வெளிப்படையான நட்புப் போக்கை இது காட்டுவதாக உள்ளது.
அமெரிக்க வர்த்தக அமைச்சு திங்களன்று லித்தியம் பேட்டரி பொருள் தயாரிப்பு நிறுவனமான குவாங்டோங் குவாங்ஹுலா, அறிவியல் தொழில்நுட்ப நுண்கருவி தயாரிப்பு நிறுவனமான நான்ஜிங் கோவா டெக்னாலஜி போன்ற நிறுவனங்களை அதன் “உறுதிப்படுத்தப்படாத பட்டியலில்” இருந்து நீக்கியது.
இப்பட்டியலில் இடம்பெறுவது அமெரிக்க தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான நிறுவனத்தின் திறனைக் கட்டுப்படுத்தும். இப்பட்டியலில் இடம்பெறும் நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனம், அமைப்புகளிடம் இருந்து பொருள்களை வாங்க கூடுதல் உரிமம் பெறவேண்டும்.
இரு பல்கலைக்கழகங்கள், ஏனைய தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட 27 சீன நிறுவனங்கள், அமைப்புகள் உட்பட இந்தோனீசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், அமைப்புகளின் பெயர்களையும் நீக்கியுள்ளது.
உலகின் இரு பெரிய பொருளியல்களுக்கு இடையிலான பதற்றத்தைக் குறைக்கும் பைடன் நிர்வாகத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக திருவாட்டி ரைமொண்டோ ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் சீனாவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா- சீன வர்த்தக அமைச்சுகளுக்கிடையே ஒரு பணிக்குழுவை நிறுவுவது ரைமொண்டோ பயணத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்று என்று ப்ளூம்பெர்க் நியூஸ் முன்னர் தெரிவித்தது.
அதிநவீன அமெரிக்க தொழில்நுட்பத்தை சீனாவின் ராணுவம் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பற்றி அந்தக் குழு விவாதிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
பைடன் நிர்வாகம் இரு நாடுகளுக்கும் இடையிலான கசப்பான உறவுகளை மேம்படுத்த முயற்சிக்கும் நேரத்தில், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் சீனாவின் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில் வாஷிங்டனின் பழமைவாதிகள் இன்னும் கூடுதலான தடைகளுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், சீன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு எதிராகவும் உள்ளனர்.

