கோலாலம்பூர்: இம்மாதம் 17ஆம் தேதியன்று மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் ஷா அலாம் நகரம் அருகில் உள்ள சாலை ஒன்றில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் இருந்த பத்து பேருடன் சாலையில் சென்றுகொண்டிருந்த இருவரும் மாண்டனர்.
விமானம் லங்காவியிலிருந்து சுபாங்கிற்குச் சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில், விமானத்தின் குரல் பதிவு பெட்டியிலிருந்து தரவுகளை மீட்க அமெரிக்காவின் ஃபுளோரிடா நகருக்கு அது அனுப்பிவைக்கப்படுகிறது.
அந்தக் குரல் பதவிப் பெட்டியை உற்பத்தி செய்த நிறுவனத்திடம் அது அனுப்பிவைக்கப்படுகிறது.
இந்தத் தகவலை மலேசியப் போக்குவரத்து அமைச்சர் அண்டனி லோக் வெளியிட்டார்.
குரல் பதவிப் பெட்டியிலிருந்து தரவுகளை மீட்க குரல் பதிவுப் பெட்டி சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் அவர் கூறினார்.
“விமான விபத்து புலன்விசாரணைப் பிரிவினரை இன்று அல்லது நாளை அமெரிக்கா அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அவர்கள் விமானக் குரல் பதிவுப் பெட்டியைத் தங்களுடன் கொண்டு செல்வர். அப்போதுதான் குரல் பதிவுப் பெட்டியிலிருந்து தரவுகளைக் கூடிய விரைவில் மீட்க முடியும்,” என்று அமைச்சர் லோக் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தரவுகளை மீட்க குரல் பதிவுப் பெட்டி ஏன் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று அமைச்சர் லோக்கிடம் குரல் எழுப்பப்பட்டது.
அதற்குப் பதலளித்த திரு லோக், மாண்டோரின் குடும்பங்களுக்கு விபத்தின் காரணத்தை விரைவில் தெரிவிக்க அவ்வாறு செய்யப்பட்டதாகக் கூறினார்.
“இத்தகைய நிலையில் வரட்டு கௌரவம் இருக்கக்கூடாது. குரல் பதிவுப் பெட்டியிலிருந்து தரவுகளை மீட்டு, பாதிப்படைந்த குடும்பங்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு முன்னுரிமை தர வேண்டும்,” என்றார் அமைச்சர் லோக்.
“அதுமட்டுமல்லாது, எந்தெந்த இடத்தில் மேம்பட வேண்டும், இதே போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள இது ஒரு பாடமாக அமையும்,” என்றார் அவர்.

