கம்பி வண்டியில் மாணவர்கள் சிக்கி பரிதவிப்பு

கம்பி வண்டியில் மாணவர்கள் சிக்கி பரிதவிப்பு

1 mins read
21a7002d-84a9-4015-831a-1cc7149a9e9f
பள்ளிக்குக் கம்பி வண்டியில் சென்றுகொண்டிருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அதன் கம்பிகள் அறுந்து சிக்கிக்கொண்டனர். - படம்: இணையம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் கம்பி வண்டி ஒன்றின் கம்பிகள் அறுந்ததில் அதில் எண்மர் மாட்டிக்கொண்டனர்.

அவர்களில் பள்ளிச் சிறுவர்களும் அடங்குவர். சிக்கிக்கொண்டவர்களை மீட்பதற்காக பாகிஸ்தானிய ராணுவத்தின் துரிதச் செயல்பாட்டுக் குழு சம்பவ இடத்திற்கு செவ்வாய்க்கிழமை காலையில் விரைந்தது.

மாணவர்களுடன் ஆசிரியர்கள் என நம்பப்படும் உள்ளூர்வாசிகள் அந்தக் கம்பி வண்டியில் பயணம் செய்தபோது சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 900 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்த கம்பி வண்டி, திடீரெனக் கம்பி அறுந்து நின்றதாக நம்பப்படுகிறது.

அப்பகுதியில் ஆற்றைக் கடப்பதற்கு சாலைகளும் பாலங்களும் இல்லாத காரணத்தால் கம்பி வண்டிச் சேவையை உள்ளூர்வாசிகள் இயக்கி வந்ததாக அறியப்படுகிறது.

கம்பி வண்டியின் கீழே மீட்புப் படையினர் வலைகள் விரிக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் உயரம் காரணமாகவும் மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாகவும் மீட்புப் பணிகளை மேற்கொள்வது இயலாத ஒன்றானது எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், கம்பி வண்டியில் சிக்கியவர்களில் இதயப் பிரச்சினை உள்ள ஒரு மாணவர் சுயநினைவிழந்த நிலையில் இருப்பதாகக் கம்பி வண்டியில் இருந்த பயணி ஒருவர் கைப்பேசி வழியாக ‘ஜியோ நியூஸ்’ நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இதற்கிடையே ஹெலிகாப்டர்களின் உதவியுடன் சிக்கியவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் அப்பகுதிவாழ் மாணவர்கள் குறைந்தது 150 பேர் இத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு பள்ளியை அடைகின்றனர் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்