தொடர்ந்து ஆறாவது முறையாகத் தாக்கப்பட்ட மாஸ்கோ

2 mins read
0ce54d70-63be-467a-9f6b-633fa97eba72
ஆளில்லா வானூர்தி தாக்குதல் காரணமாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் அனைத்துலக வர்த்தக மையக் கட்டடம் சேதமடைந்தது. - படம்: ஏஎஃப்பி

மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ தொடர்ந்து ஆறாவது முறையாகத் தாக்கப்பட்டுள்ளது. இந்த ஆளில்லாத் தாக்குதல்கள் அனைத்தும் இரவு நேரத்தில் நடத்தப்பட்டன.

புதன்கிழமையன்று மாஸ்கோவில் உள்ள அனைத்துலக வர்த்தக மையக் கட்டடம் சேதமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யா-உக்ரேன் போரில் இருதரப்பினரும் மாறி மாறி ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

அண்மைக் காலமாக உக்ரேன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளது.

ரஷ்யப் பீரங்கிப் படை நடத்திய தாக்குதல்களில் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்கள் பாதிக்கப்பட்டதாகவும் அங்குள்ள மூன்று பேர் மாண்டதாகவும் இருவர் காயமடைந்ததாகவும் உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.

இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில் மாஸ்கோ மீதான ஆக அண்மைய தாக்குதல் நடத்தப்பட்டதாக அறியப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக மாஸ்கோ மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இருப்பினும், பெருமளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மாஸ்கோவை நெருங்கிய உக்ரேனுக்குச் சொந்தமான இரண்டு ஆளில்லா வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு கூறியது.

இன்னோர் ஆளில்லா வானூர்தியை ரஷ்யப் படையினர் சுட்டு வீழ்த்தியதை அடுத்து அது மாஸ்கோவில் உள்ள வர்த்தக வட்டாரத்தில் உள்ள ஒரு கட்டடம் மீது விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்கள் காரணமாக மாஸ்கோவில் உள்ள மூன்று விமான நிலையங்களில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

ஆளில்லா விமானம் விழுந்ததில் கட்டடம் சேதமடைந்தது. அதையடுத்து, தீயணைப்பு வாகனங்களும் இதர அவசரகால வாகனங்களும் அவ்விடத்துக்கு விரைந்தன.

இருப்பினும், இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

கடந்த மே மாதத்தில் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அரசாங்கக் கட்டடங்களை நெருங்கிய ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்