பாஷ்டோ, பாகிஸ்தான்: பாகிஸ்தானில் பள்ளத்தாக்கிற்கு மேல் பழுதாகிநின்ற கம்பி வண்டியில் சிக்கி இருந்த ஆறு பள்ளிச் சிறுவர்கள் உட்பட எட்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் அறுவரும் 10 முதல் 15 வயது வரையுள்ளவர்கள் என அறியப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை பல மணி நேரம் சிக்கித் தவித்த அவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்களும் கமாண்டோ படையினரும் துணிகரமான மீட்புப் பணியில் இறங்கினர்.
கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு ஹெலிகாப்டர் ஒரு பிள்ளையைப் பாதுகாப்பாக மீட்டது. ஆனால் மோசமான வானிலையும் இரவாகி விட்டதாலும் ஹெலிகாப்டர் கீழ்த் தளத்துக்கு இறங்கி வேண்டியதாகி விட்டது.
பின்னர், மெரூன் பெரெட்ஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தானின் சிறப்பு சேவைக் குழுவின் (எஸ்எஸ்ஜி) கமாண்டோக்கள் கம்பி வண்டி பள்ளத்தாக்கில் மூழ்காமல் தடுத்து, தொங்கு வடம் மூலம் கம்பிவண்டி தொங்கிக்கொண்டிருந்த கயிற்றின் வழி சிக்கித் தவித்தவர்களைக் காப்பாற்றினர்.
“இன்றே என் வாழ்வின் கடைசி நாள், என் கதை முடிந்து விட்டது என்று நினைத்தேன்,” என்றார் மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரான அத்தாவுல்லா ஷா.
“கடவுள் எனக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கியுள்ளார்,” என்று 15 வயது சிறுவன் கூறினான்.
மீட்புப் பணியாளர்களை “நாட்டின் ஹீரோக்கள்,” என்று பாகிஸ்தானின் தற்காலிகப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கர் வர்ணித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“ராணுவம், மீட்புப் பிரிவு, மாவட்ட நிர்வாகம், உள்ளூர் மக்கள் அனைவரும் குழுவாகச் சேர்ந்து சிறந்த பணியாற்றியுள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வண்டியிலிருந்த இரு பெரியவர்களும் கடைசியாக பாதுகாப்பாக மீட்கப் பட்டனர் என்று பாகிஸ்தானின் அவசர சேவைப் பிரிவு அதிகாரி திரு பிலால் ஃபைசி கூறினார்.
முதல் மீட்பு காணொளி, ஹெலிகாப்டரில் இருந்து தொங்கும் கயிற்றைப் பிடித்தபடி ஓர் இளம் பெண் தொங்கிக்கொண்டிருப்பதையும் மக்கள் நிம்மதியுடன் ஆரவாரம் செய்வதையும் காட்டியது.
“எல்லோரும் மீட்கப்பட்டவுடன், குடும்பங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியில் கண்ணீர் மல்கினர்,” என்று அவசர சேவை அதிகாரி வக்கார் அஹ்மட் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“கயிறு அறுந்துவிடுமோ என்ற அச்சம் இருந்ததால் மக்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். கடைசி ஆள் மீட்கப்படும் வரை மக்கள் பிரார்த்தனை செய்தனர்.”
கம்பி வண்டி தரையில் இருந்து ஏறக்குறைய 1,000 முதல் 1,200 அடி வரை தொங்கிக் கொண்டிருந்தது.
பசுமையான அலெய் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை (22 ஆகஸ்ட்) ஆறு சிறுவர்களும் இரு பெரியவர்களுடன் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது காலை 7 மணியளவில் கம்பிவண்டி பாதி வழியில் பழுதாகியது. அவர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து ஆகியவை ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்டன.
மலைப்பகுதியில் இருக்கும் பள்ளிக்குச் செல்ல அப்பகுதி சிறுவர்கள் கம்பிவண்டியைப் பயன்படுத்துவது வழக்கம்.
சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் மலைப்பகுதிகளில் செயல்படும் கம்பிவண்டிகளைச் சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

