சோல்: ஃபுக்குஷிமா நீரை ஜப்பான் கடலுக்குள் விடத் தொடங்கிவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென்கொரியத் தலைநகர் சோலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அங்குள்ள ஜப்பானியத் தூதரகத்துக்குள் நுழைய முயன்ற குறைந்தது 14 ஆர்ப்பாட்டாளர்களைத் தென்கொரியக் காவல்துறையினர் கைது செய்தததாக ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவரும் ராய்ட்டர்ஸ் செய்தியாளரும் தெரிவித்தனர்.
சேதமடைந்த அணுவாயுத ஆலையிலிருந்த நீரைச் சுத்திகரித்து அதை மீண்டும் பசிபிக் கடலுக்குள் ஜப்பான் புதன்கிழமையன்று விடத் தொடங்கியது.
இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் இளையர்கள்.
ஃபுக்குஷிமா நீரைக் கடலுக்குள் விடக்கூடாது என்று கூறி அவர்கள் தூதரகம் இருந்த எட்டாவது மாடியை அடைந்தனர்.
அங்கு அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் பதாகைகளைத் தொங்கவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“கடல், ஜப்பானின் குப்பைத் தொட்டி இல்லை”, “மாசடைந்த நீரைக் கடலுக்குள் விடுவதை உடனடியாக நிறுத்தவும்” போன்ற வாசகங்களை அந்தப் பதாகைகள் கொண்டிருந்தன.
ஆர்ப்பாட்டாளர்களைக் காவல்துறையினரை அங்கிருந்து குண்டுக்கட்டையாகத் தூக்கிச் சென்று கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்குள் ஏற்றியதாக சம்பவத்தை நேரில் கண்ட ராய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவித்தார்.