தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஃபுக்கு‌ஷிமா நீரை ஜப்பான் கடலில் கலந்ததால் கண்டனங்கள், கடலுணவுத் தடைகள்

2 mins read
cdbdb4dd-5d4c-4ba5-b27b-dcc499d01e83
ஃபுக்கு‌ஷிமா நீர் கடலில் கலக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென்கொரிய சுற்றுப்புற ஆர்வலர்கள் பூசான் கடற்கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஃபுக்கு‌ஷிமா அணுசக்தி ஆலையின் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஜப்பான் வியாழக்கிழமையன்று பசிபிக் கடலில் கலக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஜப்பானின் செய்கை “சுயநலமான பொறுப்பற்ற” செயல் என்று சீனா கடுமையான கண்டனம் தெரிவித்தது.

ஃபுக்கு‌ஷிமா நீரை கடலில் கலப்பதற்கு ஜப்பானிய அரசாங்கம் ஈராண்டுகளுக்குமுன்பும், ஐக்கிய நாட்டு அணுசக்தி அமைப்பு ஜூலை மாதமும் அனுமதி அளித்தன. ஃபுக்கு‌ஷிமா டாய்ச்சி ஆலையை முழுமையாக அகற்றுவது சிரமமான, நீண்டகாலப் பணியாகும். அதன் ஒரு முக்கிய பகுதியே நீர் வெளியேற்றம்.

ஜப்பானிய நேரப்படி பிற்பகல் 1.03 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி பகல் 12.03 மணி) நீர் வெளியேற்றம் தொடங்கியதாக ஆலையை நடத்தும் தோக்கியோ இலெக்ட்ரிக் பவர் நிறுவனம் (டெப்கோ நிறுவனம்) தெரிவித்தது. கடல் நீரேற்றச் சாதனத்தில் அல்லது சுற்றுவட்டார வசதிகளில் வழக்கத்திற்கு மாறான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று நிறுவனம் கூறியது.

ஃபுக்கு‌ஷிமா நீர் கடலில் கலக்கப்படுவதற்கு முன்னரே சீனா தனது கோபத்தை வெளிப்படுத்தியது.

ஜப்பானிய அரசாங்கம் “மிகவும் சுயநலமாகவும் பொறுப்பில்லாமலும் பலவந்தமாக நீரை வெளியேற்றி… மனிதகுலத்தின் நலனுக்குமேல் சுயநலனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது,” என்று சீன அணு பாதுகாப்பு நிர்வாகப் பேச்சாளர் வியாழக்கிழமை கூறினார்.

கடல்வாழ் உயிரினங்களையும், உணவுப் பாதுகாப்பையும், பொதுச் சுகாதாரத்தையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்றும், கடல்நீரில் கதிரியக்கத்தின் அளவு அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், சீனா “அறிவியல்பூர்வ ஆதாரமில்லாத கருத்துகளை” பரப்பி வருவதாக ஜப்பான் கூறியது. கடலில் கலக்கப்படும் நீர் பாதுகாப்பானது என்று ஜப்பான் சொன்னது. மேலும், மக்களுக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு “புறக்கணிக்கத்தக்கதென” அனைத்துலக அணுசக்தி அமைப்பும் முடிவுக்கு வந்திருப்பதைச் சுட்டிக் காட்டியது.

ஜப்பானின் முடிவை அறிவியல் ஆதரித்தாலும், இந்தச் “சிக்கலான” விவகாரத்திற்கு வட்டார நாடுகள் இணங்க இயலாது என்று குக் தீவின் பிரதமர் மார்க் பிரவுன் கூறியிருக்கிறார்.

ஜப்பானிய மீன்பிடிக் குழுக்களும் ஃபுக்கு‌ஷிமா நீர் கடலில் கலக்கப்படுவதை நீண்டகாலமாக எதிர்த்து வருகின்றன. முக்கிய சந்தைகள் ஏற்றுமதிக்குத் தடை விதித்தால் விற்பனை குறைந்துவிடும் என அவை அஞ்சுகின்றன.

இந்நிலையில், ஹாங்காங்கும் மக்காவும் ஜப்பானியக் கடலுணவுக்கு வியாழக்கிழமை முதல் தடை விதிக்கவிருந்தன.

ஃபுக்கு‌ஷிமா டாய்ச்சி ஆலை 2011 மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது சுனாமியால் அழிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்