பிரிகோசின் விமான விபத்து: வெடிப்பு சத்தம் கேட்ட கிராமவாசிகள்

2 mins read
5fae00e4-6761-461d-ab62-d8d002a293d9
வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்கெனி பிரிகோசின் பயணம் செய்த விமானம் மாஸ்கோவுக்கு வடக்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் அவர் மாண்டுவிட்டார் என்று கூறப்படுகிறது. - படங்கள்: ராய்ட்ட்ர்ஸ்
multi-img1 of 2

மாஸ்கோ: ரஷ்யாவின் மிகச் சக்திவாய்ந்த வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்கெனி பிரிகோசின் புதன்கிழமை நிகழ்ந்த விமான விபத்தில் மாண்டதாக நம்பப்படுகிறது.

விமான விபத்து ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவுக்குப் வடக்குப் பகுதியில் நிகழ்ந்தது. விமானத்தில் இருந்தோர் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த பிரிகோசினுக்கு என்ன ஆனது என்பது குறித்து ரஷ்ய அரசாங்கம் தகவல் ஏதும் வெளியிடவில்லை.

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு அருகில் உள்ள கிராமவாசிகள் விபத்துக்கு முன்பு வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தெரிவித்தனர்.

ஓடிச் சென்று பார்த்தபோது அந்த விமானம் கட்டுப்பாடு இழந்து மிக விரைவாக நிலத்தை நோக்கி விழுந்ததாக அவர்கள் கூறினர்.

விமானத்திலிருந்து புகை கிளம்பியதாகவும் அதன் ஒரு பாகம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உக்ரேனுக்கு எதிராக ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் வகுத்த வியூகங்களை பிரிகோசின் கடுமையாக விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராம் செயலியில் வாக்னர் அமைப்புடன் தொடர்புடைய ஒளிவழி ஒன்று பிரிகோசின் இறந்துவிட்டதாகத் தெரிவித்தது. அவரை ஒரு வீரர் என்றும் தேசப் பற்று மிக்கவர் என்றும் அது வர்ணித்தது.

பிரிகோசினின் மரணத்துக்கு ரஷ்யாவுக்குத் துரோகம் விளைவிப்பவர்கள் காரணம் என்று அது குற்றம் சாட்டியது.

பிரிகோசினின் ஆதரவாளர்களில் சிலர் அவரது மரணத்துக்கு ரஷ்ய அரசாங்கம் காரணம் என்று கூறுகின்றனர். சிலர் உக்ரேனைக் குறைகூறுகின்றனர்.

இதற்கு முன்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை எதிர்த்துக் கடுமையாக விமர்ச்சித்தவர்கள் பலர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். அல்லது மரணத்தின் விளிம்பு வரை சென்றனர். அவர்களில் வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்கும் அரசியல்வாதிகளும் செய்தியாளர்களும் அடங்குவர்.

இதற்கிடையே, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வாக்னர் அமைப்பின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடத்துக்கு வெளியே பிரிகோசினின் ஆதரவாளர்கள் பலர் மலர் வளையம் வைத்தும் மெழுகுவர்த்தியும் ஏற்றி தங்கள் மரியாதையைத் தெரிவித்துக்கொண்டனர்.

கடந்த ஜூன் மாதம் ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக வாக்னர் அமைப்பு ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டது.

இதனால் பிரிகோசின் மீது அதிபர் புட்டின் சினங்கொண்டார்.

தற்போது தலைவர் இன்றி இருக்கும் வாக்னர் அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்