வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயது தொழில்முனைவரான விவேக் ராமசாமிக்கு அமெரிக்க மக்களிடம் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான விவாதம், புதன்கிழமை இரவு விஸ்கான்சின் மாநிலத்தின் மில்வாக்கி நகரில் நடைபெற்றது.
அதில் விவேக் ராமசாமி காரசாரமாகப் பேசினார்.
விவாதம் முடிந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 450,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகை விவேக் ராமசாமிக்கு நன்கொடையாக கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சராசரியாக ஒவ்வொருவரும் 38 அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை இரவு நடந்த விவாதத்தில் நியூ ஜெர்சி மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி, ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான முன்னாள் தூதர் நிக்கி ஹேலி, முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் விவேக் ராமசாமியைக் கடுமையாகச் சாடினர்.
இருப்பினும், விவேக் ராமசாமிக்கு 28 விழுக்காடு ஆதரவு கிடைத்தது.
சமூக ஊடகம், இணையம் ஆகியவற்றிலும் விவேக் ராமசாமிக்கு ஆதரவு கூடிவருவதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.