உணவுக்காக முகாம்களில் தவிக்கும் குழந்தைகள்

உணவுக்காக முகாம்களில் தவிக்கும் குழந்தைகள்

2 mins read
e5095c76-1792-4a9a-9fc7-e683c6d75288
நிதிப்பற்றாக்குறையால் அகதிகள் முகாமில் வாழும் ஒருவருக்கு சராசரியாக மாதத்துக்கு 10 வெள்ளி தான் ஒதுக்கப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: பங்ளாதே‌ஷில் உள்ள 33 அகதிகள் முகாம்களில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்யா அகதிகள் வாழ்கின்றனர்.

மோசமான கூட்ட நெரிசல், வன்முறை, உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் என பல இன்னல்களுடன் அகதிகள் அந்த முகாம்களில் வாழ்ந்து வருவதாக பங்ளாதே‌‌ஷுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அகதிகள் பிரிவுத் தலைவர் ஜோகனஸ் வான் டெர் கிளாவ்,  ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். 

அந்த முகாம்களில் உள்ள குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு நாளுக்குச் சராசரியாக  27 காசுகளில்தான் அவர்கள் உணவு உண்ணுகிறார்கள் என்றார்  கிளாவ். 

முகாம்களில் சட்டவிரோதச் செயல்களும் வன்முறை போன்ற நிகழ்வுகளும் அடிக்கடி நடப்பதால் அங்குள்ள குழந்தைகளின் எதிர்காலம் மிகுந்த கேள்விக்குறியாக இருப்பதாக கிளாவ் வருத்தம் தெரிவித்தார். 

அனைத்துலக அளவில் உதவிகள் வேண்டும் என்றும் அடைபட்டுள்ள அகதிகளுக்குக் கல்வி, வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

தங்கள் வாழ்க்கை, மற்ற நாடுகள் கொடுக்கும் நிதி உதவிகளைச் சார்ந்து இருப்பதை அகதிகளும் மாற்ற நினைக்கின்றனர் என்றும் அவர் சொன்னார். 

புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் குடிமக்களாகக் கருதப்படுவதில்லை. ரோஹிங்யா மக்கள் பங்ளாதே‌சைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் மியன்மாரில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

உலக அளவில் நாடற்றவர்கள் பட்டியலில்  ரோஹிங்யா முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். 

ஆக மோசமாக 2017 ஆகஸ்ட் மாதம் ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 500,00 ரோஹிங்யா மக்கள் ஆபத்தான காடுகளையும் நாஃப் நதியையும் கடந்து பங்ளாதேசுக்குள் நுழைந்தனர். 

அப்போது ஏற்பட்ட வன்முறையில் 9,000 பேர் மாண்டனர்.  

இன அழிப்பு, மனித குலத்திற்கு எதிராகச் செயல்படுதல் போன்ற நடவடிக்கையில் மியன்மார் ராணுவம் ஈடுபட்டதாக அமெரிக்கா 2022ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது. 

தற்போது பங்ளாதேஷில் முகாமிட்டுள்ள அகதிகள் நிரந்தரமாக அங்கிருக்கப் போவதில்லை என்பதால் அவர்கள் குடிசைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

நிதிப் பற்றாக்குறையால் அகதிகள் முகாமில் வாழும் ஒருவருக்குச் சராசரியாக மாதத்துக்கு 10 வெள்ளிதான் ஒதுக்கப்படுகிறது.

இந்த சிறுதொகையைக்கொண்டுதான் அவர்கள் உண்ண வேண்டிய நிலையில் உள்ளனர்.  

போதைப்பொருள், கொலை, ஆட்கடத்தல் போன்ற குற்றச்செயல்களும் முகாம்களில் நடக்கத்தொடங்கியுள்ளதால் அங்கு நிலைமை மோசமாகத் தொடங்கியுள்ளது. 

போதுமான அளவில் நிதி வரவில்லை என்றால் நிலைமை மேலும் மோசமாகக்கூடும் என்று கிளாவ் அச்சம் தெரிவித்தார்.

அடுத்தகட்டமாக அகதிகளுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளைப் பற்றி எடுத்துரைத்து அதன் நன்மைகளை விளக்க இருப்பதாகக் கூறினார் கிளாவ். அது அவர்களுக்கு வாழ்க்கைமீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

குறிப்புச் சொற்கள்