ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர முற்பட்ட மருத்துவருக்கு அமெரிக்காவில் 18 ஆண்டு சிறை

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர முற்பட்ட மருத்துவருக்கு அமெரிக்காவில் 18 ஆண்டு சிறை

1 mins read
1e710089-c727-4040-9735-a81489e825d5
பாகிஸ்தானில் மருத்துவக் கல்வியை முடித்த மசூது, எச்-1பி விசாவில் 2018 முதல் அமெரிக்காவில் வசித்து வந்தார். - கோப்புப் படம்

மினிசோட்டா: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர விரும்பிய மருத்துவர் ஒருவருக்கு அமெரிக்காவில் 18 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த முகம்மது மசூது எனும் அந்த 31 வயது மருத்துவர், பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவு வழங்க முற்பட்ட குற்றத்தை அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டார்.

சிறைக்காலம் முடிந்து மசூது விடுவிக்கப்பட்டவுடன் ஐந்து ஆண்டுகளுக்கு அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என்று நீதிபதி பால் மேக்னசன் தமது தீர்ப்பில் கூறினார்.

ரோச்சர்ஸ்டரில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்த மசூது, 2020 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். லாஸ் ஏஞ்சலிசுக்குப் புறப்படவிருந்த விமானத்தில் ஏறுவதற்கு முன் செயிண்ட் பால் விமான நிலையத்தில் அவர் கைதானார்.

லாஸ் ஏஞ்சலிசில் இருந்து சரக்குக் கப்பல் மூலம் மத்திய கிழக்கிற்குச் சென்று பயங்கரவாத அமைப்பில் சேர மசூது திட்டமிட்டிருந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

பாகிஸ்தானில் மருத்துவக் கல்வியை முடித்த மசூது, எச்-1பி விசாவில் 2018 முதல் அமெரிக்காவில் வசித்து வந்தார்.

சமூக ஊடகத் தளங்களில் மசூதின் நடவடிக்கைகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 2020 ஜனவரியில் அவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்