வரவுசெலவுத் திட்டத்திற்கு முன் முக்கிய அறிவிப்புகள்: அன்வார்

2 mins read
d502603b-7dad-49de-83da-c1747997c717
பரந்த அளவிலான தொழில்துறைத் திட்டம் சாதாரண ஒரு திட்டமாக இருக்காது என்று கூறிய பிரதமர் அன்வார் இப்ராகிம், அது குறிப்பிட்ட செயல்திட்டங்களில் அல்லது துறைகளில் ஒருமித்த கவனம் செலுத்தும். மின்னிலக்க உருமாற்றம் உள்ளிட்ட இலக்குகளையும் அது நிர்ணயிக்கும் என்று தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்  

கோத்தா இஸ்கந்தர், ஜோகூர்: மலேசிய அரசாங்கம் வரும் அக்டோபரில் 2024 வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யும். அதற்கு முன்னதாக சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

அவற்றில் அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கும் பரந்த அளவிலான தொழில்துறை திட்டம் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.

அந்தத் தொழில்துறை திட்டம் சாதாரண ஒரு திட்டமாக இருக்காது என்று கூறிய பிரதமர், அது குறிப்பிட்ட செயல்திட்டங்களில் அல்லது துறைகளில் ஒருமித்த கவனம் செலுத்தும் என்றார்.

மின்னிலக்க உருமாற்றம் உள்ளிட்ட இலக்குகளையும் அது நிர்ணயிக்கும் என்று அன்வார் தெரிவித்தார்.

செல்வத்தைப் பெருக்கும் வகையிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்க ஏதுவாகவும் சிறிய, நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவது பற்றியும் ஆராயப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர், ஜோகூரில் வரவுசெலவுத் திட்ட சாலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளில் ஒரு மித்த கவனம் தொடரும். அதேவேளையில் உள்ளூர் முதலீடுகளை மேலும் எப்படி அதிகமாக்கலாம் என்பது பற்றியும் ஆராயப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட தரப்புகளை எல்லாம் ஈடுபடுத்தி, கருத்துகளை, யோசனைகளைத் திரட்டி, நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும்படி ஐக்கிய அரசில் உள்ள அமைச்சுகளுக்குத் தான் உத்தரவிட்டு இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை, யோசனைகளைத் திரட்டுவதற்காக ஜோகூர் சாலைக்காட்சியை அரசாங்கம் நடத்துவதாகத் தெரிவித்த திரு அன்வார், இதன் மூலம் புதிய வரவுசெலவுத் திட்டம் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்