ஜகார்த்தா: திங்கட்கிழமை (ஆகஸ்ட் 28) முதல் ஜகார்த்தாவின் புதிய இலகு ரயில் சேவை (எல்ஆர்டி) இயங்கத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய இலகு ரயில் பாதையில் 18 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
குடியிருப்புப் பகுதிகள் முதல் வர்த்தக வட்டாரங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இலகு ரயில் நிலையங்கள் அமைந்துள்ளதாக ‘பிடி கய்’ ரயில்வே நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு துணைத் தலைவர் ஜோனி மார்ட்டினஸ் கூறினார் என்று இந்தோனீசியாவின் அந்தாரா ஊடகம் தெரிவித்தது. ‘பிடி கய்’ அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ரயில்வே நிறுவனம்.
“தலைநகருக்கும் இதர பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்வதை எளிதாக்கி பயணிகளுக்கு உதவுவது இலக்கு,” என்றார் திரு மார்ட்டினஸ்.
ஜகார்த்தாவின் புதிய இலகு ரயில் சேவை ஓட்டுநர்கள் இல்லாத தானியக்க முறையில் இயங்கும் என்று ஜகார்ததா குளோப் ஊடகம் தெரிவித்தது. இச்சேவையில் ஒருமுறை 2,000 பேர் வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அது குறிப்பிட்டது.
எல்ஆர்டி ஜபோடெபெக் என்றழைக்கப்படும் புதிய இலகு ரயில் சேவையை ஒரு நாளைக்கு சுமார் 500,000 பயணிகள் பயன்படுத்துவர் என்று இந்தோனீசிய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜகார்த்தா குளோப் தெரிவித்தது.
இலகு ரயில் பாதையில் இருவகையான ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. காவாங் ரயில் நிலையம், முனையமாகச் செயல்படும். மற்றவை சாதாரண ரயில் நிலையங்கள் என்று திரு மார்ட்டினஸ் கூறினார் என்று அந்தாரா தெரிவித்தது.
முனையமாக இருக்கும் ரயில் நிலையத்தில் மூன்று தளங்கள் இருக்கும் என்றும் சாதாரண ரயில் நிலையங்களில் இரண்டு தளங்கள் இருக்கும் என்றும் அந்தாரா குறிப்பிட்டது.
புதிய இலகு ரயில் சேவையை 2022ஆம் ஆண்டு தொடங்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு திறப்பு இவ்வாண்டு ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தாமதங்களுக்குப் பிறகு சேவை திங்கட்கிழமையன்று திறக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

