சிட்னி: அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த சிறிய போர்ப் பயிற்சி விமானம் ஒன்று பயிற்சியின்போது விபத்துக்குள்ளானதில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவின் ‘நார்தன் டெரிட்டரி’யில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்தாகவும் விபத்தின்போது அவ்விமானத்தில் 23 பேர் இருந்ததாகவும் அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், விமானம் விழுந்த இடத்தில் இருந்து ஐந்து வீரர்கள் மீட்கப்பட்டு உடனடியாக டார்வின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அது கூறியது. கடுமையான காயங்கள் ஏற்பட்டதன் விளைவாக அந்த ஐவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளதென்று அறிக்கை தெரிவித்தது.
விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்ததை ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானத்தில் ஆஸ்திரேலியர்கள் யாரும் பயணம் செய்யவில்லை என்று அது தெரிவித்தது.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் நடந்துவருவதாகவும் அதில் முழுக் கவனம் செலுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டன.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் இது ஒரு துயரச்சம்பவம் என்று தெரிவித்துள்ளார். மீட்புப்பணிக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

