தோக்கியோ: பலத்த காற்று வீசியதால் நிலவிற்கு முதன்முறையாக விண்கலம் அனுப்பும் முயற்சியை ஜப்பான் தள்ளிவைத்துள்ளது.
எல்லாமே திட்டமிட்டபடி இடம்பெற்று வந்த நிலையில், அந்த விண்கலத்தைச் சுமந்துசெல்லும் எச்-2ஏ உந்துகணையை ஏவுவது 27 நிமிடங்களுக்கு முன்னதாக நிறுத்தப்பட்டது.
தரையிலிருந்து 5,000 மீட்டர் முதல் 15,000 மீட்டர் உயரத்திற்குள் 108 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது என்று ஜப்பானிய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (ஜக்சா) பாதுகாப்பு மேலாளர் மிச்சியோ கவகாமி தெரிவித்தார்.
ஜப்பானைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல சூறாவளிகள் வீசியது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், உந்துகணையை ஏவும் தேதி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்றும் வரும் வியாழக்கிழமைக்குள் அது இடம்பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, தெற்கு ஜப்பானில் உள்ள தனெகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து திங்கட்கிழமை காலையில் ‘ஸ்லிம்’ என்ற விவேக இறங்குகலத்துடன் கூடிய அந்த உந்துகணை ஏவப்படவிருந்தது.
மோசமான வானிலை காரணமாக கடந்த வாரமும் இம்முயற்சி இருமுறை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

