சோல்: அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் கொரிய தீபகற்பத்திற்கு அருகே கூட்டு தற்காப்புப் பயிற்சியை நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இதன் மூலம் ஆக மோசமான, நிலையற்ற கடற்பகுதியை உருவாக்கியிருப்பதாகவும் அணுவாயுதப் போருக்கான சாத்தியத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் வடகொரியா சாடியுள்ளது.
அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மூன்றும் செவ்வாய்க்கிழமை, ஜெஜு தீவில் அனைத்துலகக் கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சியை நடத்தின.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், கொரிய தீபகற்ப வட்டாரத்தில் அமெரிக்காவின் உத்திபூர்வ இருப்பு அதிகரித்திருப்பதாகக் குறைகூறுகிறார். நாட்டின் ஆயுதங்களையும் கடற்படைக் கருவிகளையும் நவீனமயமாக்கத் திட்டமிடுவதாகத் தகவல் வெளியான பிறகு இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெறுகிறது.
பியோங்யாங் சினத்தைத் தூண்டும் வகையில் நடந்துகொண்டால், இலக்குகளைக் கண்டறிதல், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை மேம்படுத்த, தங்கள் கூட்டுப் பயிற்சி உதவும் என்று தென்கொரியா கூறியது.

