சோங்சிங்: சீனாவில் குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் உள்ள மின்தூக்கியில் குழந்தையைப் பெற்றெடுத்த மாது ஒருவர், அதைக் குப்பைத் தொட்டிக்குள் வீசினார்.
பெயர் குறிப்பிடப்படாத அந்த மாது, விடுமுறையாக சோங்சிங் பகுதிக்குச் சென்றிருந்தார். ஆகஸ்ட் 21ஆம் தேதி பயணப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு மின்தூக்கிக்குள் அவர் நுழைந்தார்.
மின்தூக்கியில் ஒரு மூலையில் குந்திய அந்த மாது, குழந்தையைப் பெற்றெடுப்பதைக் காட்டும் காட்சி கண்காணிப்புக் கருவியில் பதிவானது.
திசுத் தாளைக் கொண்டு அவர் ரத்தத்தைத் துடைத்தார். மின்தூக்கி நின்றவுடன் அதிலிருந்து வெளியேறிய அந்த மாது, அங்கிருந்த குப்பைத் தொட்டிக்குள் குழந்தையை வீசினார். திசுத் தாள்களைக் கொண்டு அக்குழந்தையை அவர் மறைத்ததாக சீன ஊடகமான ஹுவான்சியூ தெரிவித்தது.
மின்தூக்கிக் கூடத்தில் இருந்த முதியவர் ஒருவர், அந்த மாதின் நடத்தையைக் கவனித்து குப்பைத் தொட்டிக்குள் பார்த்தார். ஆனால், அங்கு குழந்தை இருந்ததை அவர் பார்க்கவில்லை.
தமது காலணிகளில் இருந்த ரத்தக் கறையைத் துடைத்துவிட்டு வேறொரு மின்தூக்கிக்குள் அந்த மாது நுழைந்தார்.
அதே நாள் இரவு, உயிருடன் இருந்த அக்குழந்தையைக் குடியிருப்பாளர்கள் கண்டறிந்தனர். அவர்கள் காவல்துறையை அழைத்ததைத் தொடர்ந்து, அக்குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
சில நாள்கள் கழித்து அக்குழந்தை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாகத் தெரிவித்த மருத்துவமனை ஊழியர் ஒருவர், அந்த மாதுடனும் அவரின் வாழ்க்கைத் துணையுடனும் குழந்தை இணைந்ததாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அக்குழந்தை நலமாக இருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது. இச்சம்பவம் சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

