தென்கிழக்காசியாவில் உள்ள மோசடிக் கும்பல்களுக்காகப் பணிபுரிய லட்சக்கணக்கானோர் கடத்தப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.
சட்டவிரோத இணைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் பலர் கடத்தப்படுவதாக அது கூறியது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட கடத்தப்படுவோர் கட்டாயப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மியன்மாரில் குறைந்தது 120,000 பேரும் கம்போடியாவில் ஏறத்தாழ 100,000 பேரும் இத்தகைய கும்பல்களிடம் சிக்கியிருக்கக்கூடும் என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்திருப்பதாக ஐநா கூறியது.
இத்தகைய கும்பல்களுக்காக வேறு வழியின்றி வேலை செய்வோர் பல கொடுமைகளுக்கு ஆளாவதாகவும் அவர்கள் குற்றவாளிகள் அல்லர் என்றும் ஐநாவின் மனித உரிமைப் பிரிவு உயர் ஆணையர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.
இதுகுறித்து ஐநா விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக தென்கிழக்காசிய நாடுகளில் பல சூதாட்டக் கூடங்கள் மூடப்பட்டன.
இதன் காரணமாக பணம் ஈட்ட பல சட்டவிரோத கும்பல்கள் மோசடியில் ஈடுபடுவது அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ‘மோசடி நிலையங்கள்’ ஒவ்வோர் ஆண்டும் பல பில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டுவதாக ஐநாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எளிதில் பாதிப்படையக்கூடிய குடியேறிகளை இந்த மோசடிக் கும்பல்கள் குறிவைப்பதாக ஐநா கூறியது.
வேலை தருவதாகப் பொய் கூறி குடியேறிகளை மோசடி வலையில் இந்தக் கும்பல்கள் சிக்க வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மோசடி வலையில் சிக்கும் பலர் சீனா, தைவான், ஹாங்காங் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.
ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் இந்தக் கும்பல்களிடம் சிக்கித் தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மோசடிக் கும்பல்களை முறியடிக்க முதலில் ஊழலை எதிர்கொள்ள வேண்டும் என்று ஐநா குரல் எழுப்பியுள்ளது.
இதற்குத் தேவையான சட்டங்களை வலுப்படுத்துமாறு அது தென்கிழக்காசிய நாடுகளைக் கேட்டுக்கொண்டது.
ஐநா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறித்து மியன்மார் மற்றும் கம்போடிய அரசாங்கங்கள் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.